இன்று காதல் திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி ஆகியோரின் திருமண விழா கோவாவில் நடைபெறுகிறது. இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். திருமணம் இருவீட்டார்கள் முறைப்படி இரண்டு முறை நடைபெறவுள்ளது. இன்று காலையில் ஒன்று, மற்றொரு முறைப்படி மதியம் நடைபெறவுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே, சமீபத்தில் அயலான் போன்றத் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானியின் காதல் கதை 2021ம் ஆண்டு தொடங்கியது. பிற்பாடு அவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன. இதனையடுத்து இவர்களின் திருமணம் தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் அல்லது கடற்கரையில் நடக்கும் என செய்திகள் வெளியாகின.
நேற்று இரவு சங்கீத் நிகழ்ச்சி பிரபல இசை கலைஞர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த திருமணத்தில் பாலிவுட் ஜோடியான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஒரு பஞ்சாப்பி. திருமண மாஷப் இசை நிகழ்ச்சி மூலம் விருந்தினர்களைக் கவர தயாராகி வருகின்றனர். இரண்டு நாள் முன்னதாகவே இரு குடும்பத்தினர்கள் அனைவரும் கோவாவிற்கு சென்றுவிட்டனர். மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா தலால், இஷா தியோல், பூமி பெட்னேகர், சயீத் கான் மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திருமணத்தின் மெனுப்படி சர்க்கரை இல்லாத உணவுகளே பரிமாறவுள்ளன. இதற்கிடையே இது ஒரு பசுமை திருமணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பட்டாசுகள் இல்லாமல் பசுமையை காக்கும் விதமாக நடைபெறவுள்ளது என ரிப்போர்ட் கூறுகின்றது. மேலும் இந்த தம்பதிகள் பத்திரிக்கைகள் அடிக்காமல் டிஜிட்டல் பத்திரிக்கை மூலமே நண்பர்களையும் உறவினர்களையும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் பசுமை திருமணம் நடத்துவதற்காக தனி குழு ஒன்று தயார் செய்திருக்கிறார்களாம். ப்ளாஸ்டிக் பயன்படுத்தாமல் பீங்கான், மண் குவளை போன்றவற்றைப் பயன்படுத்தவுள்ளனர். அதேபோல் விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகள், விதைகள் போன்றவற்றை வழங்கவுள்ளனர்.