ரூ. 400 கோடி வசூல் வேட்டை! பாக்ஸ் ஆபீஸை அலறவிடும் ராம்சரணின் 'பெத்தி'!

உலக அளவில் பிரம்மாண்ட சாதனை படைத்து, இந்த ஆண்டின் தென்னிந்திய மொழி படங்களில் முதலிடத்தை பிடித்தது 'பெத்தி' திரைப்படம்!
Peddi Box office
Peddi RamcharanThe sunday guardian
Updated on

டோலிவுட் ​மெகாபவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக 2026 ஜூன் 4 அன்று உலகமெங்கும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் ஆக ,இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

இந்த திரைப்படத்தில் ராம் சரணுடன் , ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்து இருந்தார். உப்பண்ணா என்னும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய புச்சி பாபு சனா , இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.

அரசினால் கைவிடப்பட்ட காட்டுப்பகுதியில் இருக்கும் 1800 பேர் வசிக்கும் கிராமத்தின் கதாநாயகன் பெத்தி . மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்திற்கு அரசாங்கம் எந்த ஒரு வசதியும் செய்து கொடுத்தது இல்லை. அடையாள அட்டை, ரேஷன் கடை, மருத்துவமனை , மின்சார வசதி , கல்விக் கூடம் , ரயில் நிலையம் என எந்த ஒரு அரசு துறைகளும் அங்கு செயல்பட்டதில்லை.

கிராம மக்கள் அனைவரும் விவசாயக் கூலிகளாக பண்ணையார்களிடம் கொத்தடிமை போன்று வேலை பார்த்து வருகின்றனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியே பெறாமல் வெற்றி பெற்று பெத்தி பிரபலமாகி உள்ளான். அந்த ஊரின் வழியே ரயில்கள் சென்றாலும் ஒரு முறை கூட அந்த ஊரில் நின்றது இல்லை. சரியான போக்குவரத்து வசதி இல்லாத அந்த கிராமத்திற்கு ரயில் நிலையம் வேண்டும் என்று போராடி, உள்ளூர் தலைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வார். அதன் பின்னர் பெத்தி தன் கிராம மக்களுக்கு உரிய வசதிகள் கிடைக்க வேண்டும் என்று , விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கிறான்

Peddi crossed 400crore at Box office
Ram charan in film shootinstagram

பெத்தி திரைப்படம் வெளியான அன்றிலிருந்து தியேட்டர்களில் வசூல் மழை பொழிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் கருப்பு திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி இதற்கு கடுமையான போட்டி கொடுத்தாலும் , மொத்த வசூலில் பெத்தி சற்று முன்னிலையில் இருக்கிறது. படத்தயாரிப்பு நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில், 11 நாட்களில் 393 கோடி ரூபாயை கடந்து பெத்தி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை விளம்பரம் செய்துள்ளனர்.

முதல் வாரத்தின் வசூலைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்திலும் பெரிய அளவில் சரியாமல் நிலையான வருவாயை பெத்தி திரைப்படம் பெற்று வருகிறது.இதன் 12-வது நாள் வசூல் , முந்தைய நாளை விட 20.09% சரிவைக் கண்டாலும், இந்தியாவில் ₹4.10 கோடியை வசூலித்தது. ​13-வது நாள் இந்தியாவில் சுமார் 640 காட்சிகளுடன் தொடரும் இப்படம், அந்த நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் ₹261.05 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளது.

உலக அளவில் இதன் வருவாய் ₹400 கோடி என்னும் மைல்கல்லை கடந்துள்ளது. இதுவரை வசூல் செய்த ரூபாயின் அடிப்படையில் , இந்த ஆண்டு வெளியான தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வசூல் அடிப்படையில் முதலிடத்தில் பெத்தி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் கருப்பு திரைப்படம் ₹340 கோடியை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com