
ராம் கோபால் வர்மா ரிடன் - அது 1990 ஆம் ஆண்டு அமலா, நாகர்ஜூனா, ரகுவரன் நடித்த உதயம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 1989 ல் நாகார்ஜூனா நடித்து இதயத்தை திருடாதே திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்று இருந்தது. இதயத்தை திருடாதே காதல் திரைப்படம். எனவே உதயம் திரைப்படமும் காதல் திரைப்படமாக இருக்கும் என்று எண்ணி ரசிகர்கள் தியேட்டர்க்கு சென்றார்கள். ஆனால் ஏமாற்றமும், அதே சமயத்தில் ஆச்சரியமும் காத்திருந்தது. அதுவரை தமிழில் ரசிகர்கள் பார்த்திராத ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தது உதயம். காலேஜ் பேக் டிராப்பில் அரசியலை பின்னணியாக கொண்டு பரபரப்பாக நகரும் ஆக்ஷன் த்ரிலர் படமாக திரைக்கதை இருந்தது.
கத்தி, சிலம்பு போன்றவைகளை பயன் படுத்தி சண்டை காட்சிகள் இருந்த படங்களில் முதல் முறையாக சைக்கிள் செயினை கூட சண்டை காட்சிகளில் பயன் படுத்த முடியும் காட்டிய படம் உதயம். ஹீரோவுக்காக தியேட்டர்க்கு படம் பார்க்க போனவர்கள் டைரக்டர் யார் என்று தேட ஆரம்பித்தார்கள். படத்தின் டைரக்டர் ராம் கோபால் வர்மா. இந்த பெயர் 1990 முதல் இன்று வரை முப்பதைந்து வருடங்களாக இந்த பெயர் இந்திய சினிமாவில் உச்சரிக்க பட்டு கொண்டே இருக்கிறது.
1995 ஆம் ஆண்டு ரங்கீலா படம் மூலமாக பாலிவுட்டிலும் தடம் பதித்தார் ராம் கோபால் வர்மா. அடிப்படையில் இவர் தெலுங்கு பட இயக்குனராக இருந்தாலும் இயக்கிய அனைத்து படங்களும் இந்தியா முழுவதற்குமான படமாக இருந்து வருகிறது. முதல் pan இந்திய டைரக்டர் என்ற பெருமைக்குரிய டைரக்டர் இவர் தான். ராம் கோபால் வர்மா என்ற இவரது பெயரை சுருக்கி RGV என்கிறது இந்திய சினிமா.
பல வெற்றி படங்களை தந்த ராம் கோபால் வர்மா தற்போது சாரி (சேலை) என்ற படத்திற்கு கதை எழுதி திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணா கமல் இயக்கி உள்ளார். ஆராத்தியா என்ற கேரளா பெண் ஹீரோயினாக நடிக்கிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சத்யா யாது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். "என் படம் அனைத்திலும் சமூகத்திற்கான ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கும். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. பேஸ் புக் போன்ற ஊடகங்களால் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். முக நூல் நட்பால் ஒரு சைக்கோ விடம் மாட்டி கொள்ளும் ஒரு இளம் பெண் படும் பாட்டை சொல்லி இருக்கிறேன். இந்த படத்தின் மைய்ய கருவை சொல்லி விட்டேன் இருந்தாலும் படம் பார்க்கும் போது உங்களுக்கு சுவாரசியம் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். சாரி என்பது சேலையை குறிக்கிறது" என்கிறார் ராம் கோபால் வர்மா. RGV உருவாக்கி உள்ள சைக்கோவின் தரிசனம் வரும் ஏப்ரல் 4 அன்று கிடைக்க உள்ளது. கொஞ்சம் ரத்தம் அதிகமாக தெறிக்கும் படத்தின் ட்ரைலர் பல்வேறு எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.