
மிகப் பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம். மலையாளப் படவுலகில் அதிக பொருள்செலவில் உருவான படம். முன்பதிவில் சாதனை படைத்த படம். மோகன்லாலும் இயக்குநர் பிரிதிவிராஜ் சுகுமாரனும் நூறு நேர்காணல்களாவது கொடுத்துப் விளம்பரம் செய்த படம். இப்படிப் பல விஷயங்கள் இருந்து வெளியான படம் தான் எம்புரான்.
கேரளா அரசியலில் நடந்த குடும்ப அரசியலை மையப்படுத்தி வந்த படம் லூசிபர். அதில் ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற பாத்திரத்தில் அதகளம் பண்ணியவர் மோகன்லால். முதல் பாகத்தின் முடிவில் அவர் மிகப் பெரிய டான் என்றும் அவர் பெயர் குரேஷி ஆப்ரகாம் என்று முடிந்தது. கேரளா அரசியல் எதிரிகளை இடது கையிலும், உலக எதிரிகளை வலது கையிலும் டீல் செய்தார் மோகன்லால். இரண்டாம் பாகத்தில் அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன. இவர் உண்மையில் யார். கேரளா அரசியல் இருந்து இவர் விலகியபிறகு என்ன ஆனது. இந்தக் கேள்விகளுக்கு விடை தான் எம்புரான்.
படத்தின் துவக்கத்தில் ஓர் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தை ஒரு மிக்க கொடூரமாக அளிக்கிறார்கள் பலராஜ் என்பவனின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிலிருந்து ஒரு சிறுவன் தப்பிப் பிழைக்கிறான். அவன் யார். ஈராக்கில் ஆப்ரஹாம் குரேஷியும் மற்றொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனும் சேர்ந்து ஒரு கூட்டம் போடுகிறார்கள். அதில் அவர்கள் இருவரையும் கூண்டோடு அழித்து விடலாமென எம் ஐ 6 ஐச் சேர்ந்த கமாண்டோக்கள் நினைத்து அணுகுகிறார்கள். மிகப் பெரிய குண்டு வெடித்து பெரிய சேதம் நிகழ்கிறது. இதில் குரேஷி ஆப்ரஹாம் உள்பட அனைவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப் படுகிறது. அங்கு உண்மையில் நடந்தது என்ன?
கேரளாவில் ஒரு பெரிய கட்சித் தலைவரின் வாரிசாக ஆட்சியைப் பிடித்த ஜதின் தாஸ் (டோவினோ தாமஸ்) தனது அக்கா மஞ்சு வாரியரின் ஒப்புதல் இல்லாமல் சில முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கிறார். அதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அங்குக் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. லூசிபர் இறந்து விட்டார் என்பதை நம்ப மறுக்கும் பலர் கடவுளின் தேசத்தைக் காக்க வா என்று அழைப்பு விடுக்கிறார்கள். இது தான் மீதிக் கதை.
உலகத்தரத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கடுமையாக உழைத்திருக்கிறது இந்த அணி. அதில் அவர்கள் செலவழித்துள்ள கோடிகள் திரையில் தெரிகின்றன. நாடு விட்டு நாடு பயணித்துக் கொண்டே இருக்கிறது கதை. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் மோகன்லால். எம் ஐ 6ஏ இவர் கையில் இருக்கும்போது உள்ளூர் போலிஸ் என்ன செய்யும் பாவம். தான் பிறந்து வளர்ந்த ஒரு மாநிலத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் சும்மா இருப்பாரா. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல் முதல் காட்சியில் அமெரிக்காவில் இருக்கிறார். அடுத் காட்சியில் நெடும்பள்ளி கானகத்தில் உதயமாகிறார். படம் நெடுகிலும் ஸ்லோ மோஷனில் நடந்து கொண்டே இருக்கிறார். வசனங்கள் மிக்க குறைவு. இந்த ஸ்லோமோஷன் கட்சிகளைக் குறைத்திருந்தால் படத்தின் நீளத்தில் அரை மணி நேரம் குறைந்திருக்கும்.
தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கு இணையாகப் பில்டப் காட்சிகளும் வசனங்களும் படம் முழுதும் ஏராளம். இதனாலேயே மலையாளப் படம் பார்க்கிறோமா தெலுங்கு டப்பிங் படம் பார்க்கிறோமா என்ற ஐயம் வந்துகொண்டே இருக்கிறது. எல்லாக் கடத்தலும் அவருக்கு ஓகேவாம் ஆனால் போதை மருந்துகள் மட்டும் கூடாதாம். நல்ல கொள்கை. ராக்கி பாய்க்குத் தங்கம் போல இவருக்கு இவரது கொள்கை.
படம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட இதில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்று மறந்து விட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து வருகிறார். அவர் வரும் காட்சிகள் தான் படத்தின் ஹைலைட்கள். மஞ்சு வாரியருக்கு ஒரு மாஸ் காட்சி, ப்ரித்விராஜுக்கு ஒரு மாஸ் காட்சி, டோவினோ தாமஸிற்கு ஒரு மாஸ் காட்சியெனப் பிரித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர். இதில் மஞ்சு வாரியருக்கு அமைந்த காட்சிகள் சபாஷ். அவரும் அதில் அசத்தியிருக்கிறார்.
ஆனால் ஒரு படத்தைக் கொண்டாட அவ்வப்போது வரும் மாஸ் காட்சிகள் மட்டுமே போதாது. படத்தின் ஒளிப்பதிவு இயக்குநரான சுஜித் வாசுதேவும், இசையமைப்பாளர் தீபக் தேவும் மிகப் பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் சில டிரோன் ஷாட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன. இந்த டெக்னிக்கல் விதத்தில் மெனக்கெட்ட அளவிற்குக் கதைக்கு இவர் மெனக்கெடவில்லை.
மேலும் மூன்றாவது பாகம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருப்பதால் எப்படியும் இந்தப் படம் முடியப் போவதில்லை என்ற எண்ணம் முதலில் இருந்தே வந்து விடுவது ஒரு மைனஸ். சர்வ வல்லமை பொருந்தியவராக மோகன்லாலைக் காட்டிய பிறகு அவருக்கு எதுவும் ஆகாது என்பது தெளிவாகத் தெரிந்து விடுகிறது. மேலே குறிப்பிட்ட கதாபாத்திரங்களைத் தவிர இந்தப் பாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை. ஷிவதா எல்லாம் பாவம். ஒரு வசனம். ஒரு புன்னகை.
இந்திரஜித் சுகுமாரன், கிஷோர் எல்லாம் எதோ பெரிதாகச் செய்யப் போகிறார்கள் என்று நினைத்தால் சப்பென்று முடிந்துவிடுகிறது. இயக்குநர் பாசில் அதிர்ச்சியாகச் சில பல உணர்ச்சிகளைக் காட்டுவதோடு சரி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். 2002 இல் நடக்கும் அந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கடைசியில் கொண்டு வந்து முடித்தது ஒரு சின்ன ட்விஸ்ட்.
பஜ்ரங்கி என்னுடையவன் பாய் ஜான். கருணையைப் பதிலாகக் கொடுத்தால் கடவுள். பழிவாங்குவதைப் பதிலாக எடுத்தால் மனிதன் என வசனங்கள் வந்து போகின்றன. எப்படா அடுத்த பாகத்திற்கு லீட் எடுப்பார்கள் என்று பார்த்தால் மும்பையில் ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார்கள். எல் 3 ஒரு தொடக்கம் என்று எண்டு கார்டு போட்டு அனுப்பி விடுகிறார்கள். ஒரு மாஸ் படத்தை உள்ளூர் அரசியல், வெளிநாட்டுத் தீய சக்திகள், சாதியத் தாக்குதல்கள், குடும்ப அரசியல், பழி வாங்குதல் எனப் பல விஷயங்களைப் போட்டுக் கலக்கி ஒரு கமர்ஷியல் படமாகக் கொடுத்துள்ளார் பிரித்விராஜ். வித்தியாசமான கதைகளோடு நடித்துக் கொண்டிருக்கும் மோகன்லால், மம்மூட்டி போன்ற பெரிய ஹீரோக்கள் கூட அவ்வப்போது தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நடிக்கும் பக்கா கமர்ஷியல் படங்கள் சில உண்டு. சில படங்கள் ஓடினாலும் பல படங்கள் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அவர்கள் ரசனை அப்படி.
கதையெல்லாம் பெரிதாக எதுவும் வேண்டாம். இரண்டு சண்டை, இரண்டு கார் துரத்தல், துப்பாக்கி குண்டுகள், பரபரப்பான பின்னணி இசை இருந்தால் போதும். பொழுது போக வேண்டும் அவ்வளவே என்று நினைக்கும் ரசிகர்களை இந்தப் படம் ஓரளவுக்குத் திருப்தி படுத்தலாம். படத்தின் நீளத்தில் அரை மணி நேரம் அந்த ஸ்லோ மோஷன் காட்சிகளுக்கே போய்விடுகிறது. மூன்று மணி நேரம் ஓடுவதற்கெல்லாம் இந்தப் படத்தின் திரைக்கதையில் வலுவில்லை. முதலிலேயே சொன்னது போல் சீக்வல் படங்கள் இப்பொழுதெல்லாம் பெரிய மைனஸ். ஆரம்பித்ததா முடிந்ததா என்று இல்லாமல் மற்றவை அடுத்த பாகத்தில் என்றால் சில சமயம் ஏமாற்றமும் பல சமயம் அடப்போங்கடா என்றும் தோன்றுகிறது.
இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் வெளிவந்த இந்தப் படத்துக்குக் கூடக் குறைந்தபட்ச அளவு ரசிகர்கள் கூட வராமல் காட்சிகள் கான்சல் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எவ்வளவு எதிர்பார்ப்புகள் கிளம்பினாலும் ஒரு சாமானிய ரசிகன் எந்தப்படத்தைக் கொண்டாடுவான் இதைக் கைவிடுவான் என்பது என்பது இன்றுவரை யாருக்கும் புரியாத தங்கலை ரகசியம். எதைக்கொடுத்தாலும் இவர்கள் பார்ப்பார்கள் என்று யாரும் இனிமேல் படம் எடுக்க முடியாது. அங்கே தான் ஒரு ரசிகன் ஜெயிக்கிறான் என்றே தோன்றுகிறது.