இராமனா? இராவணனா? ராஜமவுலியின் நச் பதில்!

Rajamouli
Rajamouli
Published on

இராமனைப் பிடிக்குமா அல்லது இராவணனைப் பிடிக்குமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதிலைத் தந்துள்ளார் இந்தியாவின் டாப் இயக்குநர் ராஜமவுலி. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் உருவான நான் ஈ திரைப்படம் தான் முதன் முதலில் தென்னிந்திய அளவில் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதன்பிறகு வெளியான பாகுபலி திரைப்படத்தின் வரலாறு காணாத வெற்றியின் மூலம், இந்திய பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்டார். இப்படத்தை தொடர்ந்து, உலகளவில் ராஜமவுலி படம் என்றாலே பிளாக் பஸ்டர் ஹிட் தான் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டனர். ரசிகர்களின் இந்த மனநிலை சரிதான் என ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்தார் ராஜமவுலி.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூலில் ரூ.1,000 கோடி கிளப்பில் இணைந்தது மட்டுமின்றி, இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இந்த விருதின் மூலம் ராஜமவுலி உலக அளவில் மேலும் பிரபலமடைந்தார். இந்நிலையில், இராமனைப் பிடிக்குமா அல்லது இராவணனைப் பிடிக்குமா என்ற கேள்விக்கு, நச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார் ராஜமவுலி.

இராமாயணத்தில் வில்லனாக இருக்கும் இராவணன் மீது தனிப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டுள்ளார் இயக்குநர் ராஜமவுலி. இதுகுறித்து அவர் கூறுகையில் “மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் நல்லவர்கள் மற்றும் கௌரவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் நாம் சிறு வயதில் இருந்து படித்து வருகிறோம். அதேபோல் இராமாயணத்தில் இராமரை நல்லவராகவும், இராவணனை கெட்டவராகவும் படித்துள்ளோம். ஆனால், நாம் வளர்ந்து இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, அது முற்றிலும் வேறாகத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை மிகவும் பலம் வாய்ந்த வில்லன்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தோற்கடிப்பதற்கு கடினமானவராக வில்லன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனாலேயே இராவணனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால், இராமரைக் காட்டிலும் இராவணனை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
என் வாழ்வை மீட்டெடுத்தவர் இந்த பாலிவுட் நடிகர் தான்: ஜான் சீனா!
Rajamouli

வில்லன் காதாபாத்திரத்தை மிகவும் பிடிக்கும் என்று ராஜமவுலி தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், இவரது திரைப்படங்களில் கூட வில்லன்கள் மிகவும் பலசாலியாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் மற்றும் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா ஆகியோரின் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்கும். அதேபோல் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திலும் வில்லனாக வரும் ஆங்கிலேயர்களின் பாத்திரம் மெச்சிக் கொள்ளும் படி இருக்கும்.

ஒருவேளை இராமாயணத்தைப் படமாக்கும் வாய்ப்பை ராஜமவுலி பெற்றிருந்தால், நிச்சயமாக இராவணன் கதாபாத்திரத்தை மிரட்டலாக எடுத்திருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com