
தமிழகத்தில் சினிமாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இன்றைய காலக்கட்டத்தில் 10 நாட்கள் படம் ஓடினாலே அது பெரிய சாதனை தான். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் 100 நாட்கள் முதல் 1000 நாட்கள் வரை படங்கள் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. அதுவும் அன்றைய காலங்களில் டிக்கெட் விலை 50 ரூபாய் கூட இருக்காது. அப்படி இருந்த நாட்களிலேயே சுமார் ரூ.5 கோடி வசூலித்து சாதனை படம் எது என்று தெரியுமா?
அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு எபிக் கிளாசிக் திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்தப் படத்தை இப்போது டிவியில் போட்டாலும் ரிமோட்டுக்கு வேலையே கொடுக்காமல் கவனத்தை சிதறவிடாமல் பார்க்கும் ரசிகர் கூட்டம் இன்னும் இருக்கிறது. காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்திற்குமே பஞ்சம் இருக்காது. இந்த படம் வெளியாகி இதோடு 35 ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் ராமராஜன். இன்றளவும் 'கரகாட்டக்காரன் ராமராஜன்' என்ற பெயர் தான் உலாவி வருகிறது. அடுத்தடுத்து கால் ஷீட்டுகளை அடுக்கி வைத்த சாதனை இவரையே சாறும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வென்றவர் இவர். விருதுநகரை சேர்ந்த இவருக்கு கிராமத்துக்காரன் என்ற முகம் இயற்கையிலேயே அமைந்திருக்கும். இதுவே இவருக்கு லக்கியாகவும் இருந்தது. மேலும் பல படங்ளில் நடிக்க வாய்ப்பும் அமைந்தது என்றே சொல்லலாம்.
இயக்குநராக இருந்து ஹீரோவான நடிகர் ராமராஜ் அனைத்து வகையான ரசிகர்களின் மனதையும் வென்றுவிட்டார். இவர் படங்களுக்கு தியேட்டர்களில் கல்லா கட்டும் என்றே சொல்லலாம். அந்தக் காலத்து 'தில்லானா மோகனாம்பாள்' கதையின் உல்டா தான் இந்தப் படத்தின் மையக் கதை. அதில் முதலில் மோதல் பிறகு காதல், போட்டி, தாய் பாசம், சென்டிமென்ட், பிரிவு, ரொமான்ஸ், கிராமத்து வில்லனாக பண்ணையார் இப்படி எதார்த்தத்தை சேர்த்து கலந்து ஒரு உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ் கொடுத்து ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான அனைத்து ஃபார்முலாவையும் பயன்படுத்தி உச்சகட்ட வெற்றியை பெற்றது.
இந்த படம் ரூ. 35 லட்ச பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 1989ஆம் ஆண்டில் 450 நாட்களுக்கு மேல் ஓடி, ரூ.,5 கோடி வசூலித்த சாதனையை படைத்தது! இன்றளவும் இந்த சாதனையை முறியடிக்க எந்த படமும் இல்லை! அந்த அளவிற்கு பெரும் வெற்றி படமாக இருந்தது.
இன்றும் இந்த படத்தின் வசனங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். கிராமத்திற்கு சென்றால் மாங்குயிலே பாடல் இல்லாமல், திருவிழாக்கள் இல்லை. அதே போல் கோயில் திருவிழாக்களில் கூட மாரியம்மா பாடல் இல்லாமல் இல்லை. அப்படி பாட்டு, நடனம், வசனம் என ஒட்டுமொத்த படமும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்டாக இருப்பது பெரிய சாதனை தான்.
இன்றைய நாளில் கூட ராமராஜனிடம் பலரும் கரகாட்டக்காரன் 2 எடுக்கலாம் என்று கேட்கிறார்கள், ஆனால் வெற்றி வெற்றி தான் அதனால் 2ஆம் பாகம் வேண்டாம் என அவர் கூறி வருகிறார்.