
மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களிலேயே தனது திறமையால் எட்டாத உயரத்தையும், நடுத்தர மக்களின் அன்பையும் சம்பாதித்தவர் மணிகண்டன். அவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களையு,ம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். திறமை இருந்தாலும் ஜெயிக்கலாம் என இளைஞர்களுக்கு உந்துதலை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருபவர் மணிகண்டன். கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் சத்தமில்லாமல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே இவரின் குட் நைட், லவ்வர் படமும் சத்தமின்றி வெளியாகி வசூல் வேட்டையை குவித்தது. தொடர்ந்து இந்த வரிசையில் குடும்பஸ்தனும் இருக்கிறது.
அதுவும் குறிப்பாக இந்த படம் அனைவரின் வாழ்க்கையுடன் ஒத்து போவதால் மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர் மணிகண்டன். `காலா', `ஜெய்பீம்', `சில்லு கருப்பட்டி', `சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர், மணிகண்டன். 2023-ம் ஆண்டில் இவர் கதாநாயகனாக நடித்த `குட்நைட்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான `லவ்வர்' படமும் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறியுள்ளார். இவரின் மிமிக்கிரி வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி பிரபலானவை.
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் உருவான குடும்பஸ்தன் திரைப்படத்தை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கிறார். மணிகண்டன் மற்றும் சான்வே மேகனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரமும் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுஜித் என். சுப்ரமணியம் செய்துள்ளனர். மற்றும் படத்தொகுப்பு கண்ணன் பாலு, வைஷாக் இசையமைத்துள்ளார். வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்திற்காக கதாநாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை சுவாரஸ்யத்துடனும், ஏராள நகைச்சுவையுடன் சொல்லிய விதம் தான் படத்தின் பெரும் பலம்.
இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.