Saamaniyan movie review
Saamaniyan movie review

விமர்சனம்: சாமானியன் - ராமராஜனின் மாஸ்!

ரேட்டிங்(3.5 / 5)

ராமராஜன், எம். எஸ். பாஸ்கர், ராதா ரவி மூவரும் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கத் திட்டம் போடுகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களைத் துப்பாக்கி முனையில் நிற்க வைத்து தன் டிமாண்டை சொல்கிறார் ராமராஜன். அந்த டிமாண்ட் என்ன? அது நிறைவேறியதா என்பதைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. படம்: சாமானியன்.

‘மாங்குயிலே, பூங்குயிலே’, ‘செண்பகமே, செண்பகமே’ ராமராஜன் நடித்த படங்களின் பாடல்களை பாடியபடியே, நீண்ட இடைவெளிக்கு பின்பு அவர் நடித்து வெளிவந்துள்ள ‘சாமானியன்’ படம் பார்க்கச் சென்றேன். படம் ஆரம்பிக்கும் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு ராமராஜன் நடித்த பல படங்கள் நினைவுக்கு வந்தன.

‘மக்கள் நாயகன்’ என்ற பெயரோடு ராமராஜன் 1980களில் பெரிய ஹீரோவுக்கு இணையாக வலம் வந்தார். இவர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ மதுரையில் ஒரு வருடம் மேல் ஓடியது. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ (செண்பகமே, செண்பகமே), கரகாட்டக்காரன் (ஊரு விட்டு ஊரு வந்து) என பல வெற்றிப் படங்களை தந்தவர் ராமராஜன். இவரின் இயல்பான, வெள்ளந்தியான பேச்சும், பாடல்களில் இவர் நடிக்கும் விதமும் மக்களுக்கு பிடித்துப்போனது.வெற்றிக்கரமாக சென்று கொண்டிருந்த ராமராஜன் திரைப்பயணம்

1995 க்கு சரிவுகளை சந்தித்தது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ராமராஜனை பற்றி இப்படி யோசித்துக்கொண்டிருந்தபோது அரங்கித்தில் விளக்குகள் அணைந்து படம் தொடங்கியது.

படத்தின் முதல் பாதி மிகச் சாதாரணமாக நகர்கிறது. இரண்டாம் பாதி நம்மில் பலர் சந்திக்கும் இ. எம். ஐ, பர்சனல் லோன் போன்ற விஷயங்களைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. இரண்டாம் பாதி மிக ஆழமாகவும், எமோஷனலாகவும் செல்கிறது. இன்றைய சம கால பிரச்னையை சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார் ராமராஜன். மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடல் பின்னணியுடன் ராமராஜன் அறிமுகம் ஆகும்போது கரகோஷம்!

இதையும் படியுங்கள்:
“உழைப்பாளிகளின் வலி... எளியோரின் கோபம்.... நெருங்கிப் பார்த்தால், சாக்லேட்கூட கசக்கும்!” - வசந்த பாலன்!
Saamaniyan movie review

" சின்ன கடையில் கடன் அன்பை முறிக்கும், என எழுதி இருக்கு, பேங்கில் கடன் ஆயுளை முறிக்கும் என எழுதி போடணும்." "இன்னைக்கு பாட்டு பாடி பால் கறக்க முடியாது. மிஸினை மாட்டி விடுறேன், நீயே கறந்துக்கோ” போன்ற வசனங்களை ராமராஜன் சொல்லும்போது ‘சூப்பர் அண்ணே’ என்று நம்மை அறியாமல் சொல்கிறோம்.

ராமராஜன் படங்கள் என்றாலே ராஜா சார் எதோ மாயம் செய்து விடுகிறார் போல. பின்னணி இசையும் பாடல்களும் மிகச் சிறப்பு! எம். எஸ் பாஸ்கர், ராதா ரவி இருவரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். ‘மெட்டி ஒலி’ போஸ், ராமராஜனின் பெண்ணாக நடிப்பவர் என அனைவருமே சிறப்பான தேர்வு. ராமராஜனை வைத்து இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான ஒரு கதையைத் தந்த டைரக்டர் ராகேஷை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொன்னதாக ஒரு தகவல் நிலவியது. ராமராஜன் ஹீரோவாக நடித்தாலும் இன்றைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஹீரோவாக நடித்துள்ளார். நல்ல உணர்வுகளை முகத்தில் காட்டுகிறார். ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. மாறுபட்ட கதையில் வித்தியாசமான நடிப்பைத் தந்து கம் பேக் கொடுத்துள்ள ராமராஜனின் சாமானியனைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com