இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான பட்ஜெட்டில், 4000 கோடி ரூபாய் செலவில் 'ராமாயணம்' திரைப்படம் உருவாகி வருகிறது. புராண இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்குகிறார். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமர் வேடத்திலும், தென்னிந்திய திரையுலகின் செல்லக்குழந்தை சாய் பல்லவி சீதை வேடத்திலும் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் சன்னி தியோல், விக்ராந்த் மாஸ்ஸி, லாரா தத்தா, இந்திரா கிருஷ்ணன், விவேக் ஓபராய் மற்றும் அருண் கோபால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் பட்ஜெட் 1600 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது வரும் செலவு உச்சத்தை தொடுகிறது என்று படக்குழு தெரிவித்தள்ளது. இதனால் இரண்டு பாகங்களையும் சேர்த்து 4000 கோடி பட்ஜெட்டை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த 4000 கோடி பட்ஜெட் என்பது இந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், கலை இயக்கம், பிரம்மாண்டமான செட்கள், ஏஐ டப்பிங் என ஒவ்வொரு அம்சத்திலும் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப்படம் உருவாகி வருகிறது. ராமாயணத்தின் கற்பனை உலகை யதார்த்தத்திற்கு நெருக்கமான வகையில் திரையில் கொண்டு வர, அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் காட்சிகள், புராண கதாபாத்திரங்களின் சித்தரிப்பு ஆகியவை இதுவரை கண்டிராத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் நித்தேஷ் திவாரி, 'தங்கல்' போன்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்தவர். அவரது இயக்கத்தில் 'ராமாயணம்' போன்ற ஒரு காவியம் உருவாகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஆஸ்கர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார்கள் என்பது மேலும் படத்தின் எதிர்பார்ப்பை எகிரவைக்கிறது.
'ராமாயணம்' திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அப்பால், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உன்னத விழுமியங்களை திரையில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகுந்த ஆராய்ச்சி மற்றும் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இப்படம் தொடங்கும் என்பதில் ஐயமில்லை. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.