
ஆறு திசைகளுக்கு நமஸ்காரம்!
தனது தந்தையின் அறிவுரைக்கு ஏற்ப ஒரு அந்தண இளைஞன் குளித்து விட்டு நனைந்த துணியுடன் வந்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய ஆறு திசைகளுக்கு நமஸ்காரம் செய்யலானான்.
இதைப் பார்த்த புத்தர், “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.
“ஆறு திசைகளுக்கும் நமஸ்காரம் செய்கிறேன்” என்றான் அவன்.
உடனே புத்தர், “உண்மையான ஆறு திசைகள் எவை என்பதைத் தெரிந்து கொள், அப்பனே” என்றார்.
இளைஞன் மிகுந்த ஆர்வத்துடன் அவரை நோக்கி, “:ஐயனே! கூறி அருளுங்கள்” என்று வேண்டினான்.
புத்தர் கூறிய ஆறு திசைகள்!
உடனே புத்தர் கூறலானார்:
"தந்தை, தாய் ஆகிய இருவருமே கிழக்கு.
கலைகளைச் சொல்லிக் கொடுத்த குருவே தெற்கு
மனைவியும் குழந்தைகளுமே மேற்கு
நண்பர்களும் உறவினர்களுமே வடக்கு
வேலையாட்களும் பணியாளர்களுமே பாதாளம்
மகான்களே ஆகாயம்
இவர்கள் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளையே நீ செய்ய வேண்டும். அது தான் ஆறு திசைகளுக்கு நீ செய்யும் உண்மையான வணக்கம்...
ஒரு நல்ல மனிதன் ஐந்து விதமாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவ வேண்டும். பெருந்தன்மை, பணிவன்பு, அவர்களுக்கு மதிப்புத்தரல், தன்னை நடத்திக் கொள்வது போல அவர்களையும் நடத்துவது, தான் சொல்லிய வார்த்தைகளுக்குத் தக உண்மையாக நடந்து கொள்வது ஆகிய இந்த ஐந்தையும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே வடக்குத் திசைக்கான வணக்கமாகும்.
அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை நேசிக்க வேண்டும், அவன் ஆபத்துக்குள்ளாகும் போது அவனைக் கவசமாகக் காக்க வேண்டும், அபாய காலத்தில் அகதியாக சரண் அடைய வேண்டும், பிரச்சனைகள் வரும் போது அவனைக் கைவிடக் கூடாது, அவனது குடும்பத்தின் பால் அவர்கள் அன்பு செலுத்த வேண்டும் – இந்த ஐந்தே வடக்குத் திசை அவனுக்குக் கொடுக்கும் பாதுகாப்பாகும்.
பாதாள லோகத்திற்கு அவன் செய்ய வேண்டியவை ஐந்து. வேலைக்காரர்களின் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை தருவது, அவர்களுக்கு பணமும் உணவும் தருவது, நோய்வாய்ப்பட்ட போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, விசேஷமான நல்லனவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது, அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு வசதிகளைச் செய்து தருவது – ஆகிய இந்த ஐந்துமே ஒருவர் தனது வேலைக்காரர்களுக்குச் செய்ய வேண்டும்.
எஜமானன் எழுவதற்கு முன்பே எழுந்திருப்பது, அவன் உறங்கிய பின்னரே தான் உறங்குவது, தங்களுக்குக் கொடுத்தவற்றில் திருப்தி அடைவது, தமக்கு அளிக்கப்பட்ட வேலைகளைத் திறம்படச் செய்வது, தனது எஜமானனைப் பற்றி எங்கும் நல்ல விதமாகச் சொல்லி அவனது புகழைப் பரப்புவது – இந்த ஐந்துமே வேலைக்காரர்கள் செய்ய வேண்டும்.
இதுவே பாதாள திசைக்கான வணக்கமும் பயனும் ஆகும்."
இப்படி ஒவ்வொரு திசையையும் பற்றிய அவரது விளக்கத்தைக் கேட்ட இளைஞன் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்து அதன் படி வாழலானான்.
இந்த விளக்கங்களை விரிவாக புத்த மத நூலான சிகாலோவத சூத்திரத்தில் காணலாம்.