ஆஸ்கர் ரேஸில் கெத்தாக நுழைந்த 'ராமாயணம்': வரலாறு படைக்கத் தயாராகும் ரஹ்மான் - சிம்மர் கூட்டணி!

₹849 கோடி வசூலுடன் 99-வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கியது நிதேஷ் திவாரியின் பிரம்மாண்டப் படைப்பு.
Oscar award for Ramayana
Oscar award for Ramayana The gold Knight, Facebook
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இராமாயணம் திரைப்படம் உலக அளவில் ₹849 கோடி வசூலை வாரிக் குவித்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஹிந்தி, தமிழ் ,தெலுங்கு , கன்னடம் , இங்கிலீஷ் உள்ளிட பல்வேறு மொழிப் பதிப்புகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் அதி பிரம்மாண்டமான திரைப்படமான இராமாயணம் ரசிகர்களை பிரமிப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ராமாயணம் திரைப்படத்தை, நமீத் மல்ஹோத்ரா ₹4000 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில் , 99-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாகக் களம் இறங்கியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா இப்படத்தை ஆஸ்கர் விருதுகளின் பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் , சீதையாக சாய் பல்லவியும், ராவணன் வேடத்தில் யாஷ்ஷும், ஹனுமாராக சன்னி தியோலும் , விபீஷணனாக விவேக் ஓபராயும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு உலக புகழ்பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரும் இந்தியாவின் சர்வதேச இசை முகமாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்துள்ளனர். இந்த இரு இசையமைப்பாளர்களும் ஏற்கனவே ஆஸ்கர் விருதினை வென்று சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றவர்கள்.

இந்த திரைப்படத்தின் மிக முக்கிய பலமாக பின்னணியை இசையும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) காட்சிகளும் இருக்கின்றன. படத்தினை பார்க்கும் ரசிகர்கள் படத்தின் விஷுவல் காட்சிகளையும் இசையையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட ராமாயணம் திரைப்படங்களில் காட்சிப்படுத்தாத கதைகளையும் இந்த திரைப்படத்தில் இணைத்து சுவாரசியத்தை கூட்டியுள்ளனர்.

ராமாயணம் திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கான இறுதித் தேதியான செப்டம்பர் 7-ஆம் தேதியை தவறவிட்டது. ஆயினும் ஆஸ்கர் அகாடமியின் பொதுப் பிரிவு விதிகளின் கீழ் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. இதற்கும் முன்னர் 'ஆர்ஆர்ஆர்' (RRR) திரைப்படமும் இதே பாணியை பின்பற்றி ஆஸ்கர் விருது பரிந்துரையில் இணைந்து , இறுதியில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் பரிந்துரைக் குழுவின் விதிகளின் படி , 40 நிமிடங்களுக்கு மேல் ஓடும் திரைப்படங்கள் போட்டியில் பங்கேற்க முக்கிய நிபந்தனைகள் உண்டு. அமெரிக்காவின் ஆறு முக்கியப் பகுதிகளான லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, நியூயார்க் நகரம், பே ஏரியா, சிகாகோ, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் அட்லாண்டா ஆகிய ஏதேனும் ஒரு நகரத்தில் உள்ள வணிக திரையரங்கில் குறைந்தது 7 நாட்கள் தொடர்ந்து திரையிடப்பட்டிருக்க வேண்டும். கடந்த வாரம் அமெரிக்காவில் ராமாயணம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த தகுதியினை பெற்றுவிட்டது.

ஆஸ்கர் விருதினை பொருத்தவரையில் , படத்தின் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. 5 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரஹ்மான் 2 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அது போல ஹான்ஸ் சிம்மர் 12 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 முறை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் காட்சிகளுக்கு விருதுகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய யாஷிற்கும் விருது வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.