இந்தியாவில் அதிக பொருட் செலவில் இராமாயணம் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம் உலகிலேயே இதுவரை தயாரித்த படங்களை விட அதிக பட்ஜெட் மதிப்பு கொண்டது. ரன்பீர் கபூர், சன்னி தியோல் , யாஷ் , சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரும் இசையமைக்கிறார். இருவரும் 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற சர்வதேச இசையமைப்பாளர்கள். இதற்கு முன்னர் ஆஸ்கார் விருது விழாவில் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இந்திய சினிமாவில் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைப்பது இதுவே முதல் முறை . இராமாயணம் பற்றி அறியாத சிம்மரிடம் , இராமாயணக் கதைகளை கூறி , கதையோட்டத்தினை பற்றி தயாரிப்பாளர் நமீத் விளக்கினார். ஒரு கட்டத்தில் சிம்மர் பாதியிலேயே போதும் , இதற்கு மேல் விளக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அதற்கு தயாரிப்பாளர் ஏன் என்று கேட்ட போது "நீங்கள் இராமாயணத்தை பற்றி எனக்கு விளக்க வேண்டியதில்லை . அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக மக்களால் கடத்தப்பட்டு இன்று வரை உள்ளது. இந்த காலத்திற்கு பிறகும் அது நிலைத்து நிற்க கூடியது. நீங்களும் நானும் அதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஏதோ ஒன்று அதில் இருக்கிறது, அது இன்றும் இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நம்மால் முடிந்த அளவுக்கு அதில் பணி செய்வோம். அது நம் பணிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்று தெளிவாகிறது." என்று சிம்மர் கூறியுள்ளார். ஹான்ஸ் சிம்மரின் இந்த பதிலில் தயாரிப்பாளர் நமித் நெகிழ்ச்சியடைந்தார்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பெரிய திரைப்படத்தில், ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இரு இசை ஜாம்பாவான்கள் இணைகிறார்கள். இவர்கள் இணைந்து எப்படி பணிபுரிகிறார்கள் என்பதையும் நமித் கூறியுள்ளார்.
“நான் சில நேரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக அவர்களின் படைப்பின் மீது மரியாதையும் பெருமையும் உள்ளது. இவர்கள் ஒன்றிணைந்து பணிபுரிவது உண்மையில் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
மேலும் திரைப்படத்தின் விளம்பர டீசரை இறுதி செய்யும் போது, இரண்டு இசையமைப்பாளர்களின் பெயர்களில் யார் பெயரை முதலில் பதிவது? என்ற பேச்சு வந்த போது, ரஹ்மானின் பெயரை முதலில் பதிவிட வேண்டும் என்று சிம்மர் கூறினார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் 'இந்திய கலாச்சாரப்படி விருந்தினருக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நீங்கள் விருந்தினர், அதனால் உங்கள் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும். என் பெயர் பின்னால் வரட்டும்' என்று கூறியது அவரது பெருந்தன்மை," என்று நமித் தெரிவித்துள்ளார்.