வீட்டிலிருக்கும் மூத்த குடிமக்களின் அருகில் செல்லும்போது ஒருவித துர்நாற்றம் வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எதனால் அந்த நாற்றம் என்பதை எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அது ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தையும் அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.
"ஓல்ட் பீபில் ஸ்மெல்" எனப்படும், ஒரு மாதிரியான சகிக்க முடியாத ஊசின வாடை வருவதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 2-னோனெனால் (2-Nonenal) எனப்படும் ஒரு வகை இரசாயனக் கூட்டுப்பொருள் முதியவர்களின் சருமத்தில் படிவதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. வயது அதிகமாவது, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு குறைதல் போன்றவை உடலில் 2-னோனெனால் உற்பத்தியாகக் காரணமாகின்றன.
இந்த வாசனையினால் எந்த தீமையும் வராது என்றாலும், நாளடைவில் இவர்களின் தன்னம்பிக்கை குறையவும், மற்றவர்கள் அருகில் செல்ல தயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டாகும்.
2-னோனெனால் உற்பத்தியாவது வழக்கமான உயிரியல் நிகழ்வுதான். நம் வயது கூடும்போது, உடலில் இயற்கை முறையில் உற்பத்தியாகும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு குறைகிறது. இதனால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள கொழுப்புகள் ஆக்ஸிடைஸ் ஆகின்றன. அப்பொழுது செல்கள் புதுப்பிக்கப்படும் செயல்பாடுகளில் கால தாமதம் ஏற்படும்.
ஆக்ஸிடைஸ் ஆன கொழுப்புகள் சருமத்தின் மேற்பரப்பில் நீண்ட காலம் தங்கி ஊசல் வாடை உண்டாக வாய்ப்பளிக்கும். சருமத்தின் பாதுகாப்பிற்காக, சருமத்தின் அடிப்பரப்பில் உற்பத்தியாகும் 'செபம்' என்ற கொழுப்பும் எண்ணெய்ப் பசையும் கலந்ததொரு கூட்டுப்பொருளும் ஆக்ஸிடைஸ் ஆகி 2-னோனெனால் உற்பதியாக காரணமாகிறது.
2-னோனெனால், வியர்வை நாற்றம் போன்றதல்ல. நல்ல குளியல் போட்டோ, வாசனைத் திரவியங்கள் தடவியோ இதைப் போக்க முடியாது. செல் புதுப்பிப்பில் உண்டாகும் கால தாமதமும், கொழுப்பு ஆக்ஸிடைஸ் ஆவதாலும் உற்பத்தியாகும் 2-னோனெனால் நிரந்தரமாக சருமத்தில் தங்கி விடுகிறது. இதற்கு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஒரே தீர்வு, உணவில் ஷீட்டாக்(Shiitake) மற்றும் ஓய்ஸ்டர் (Oyster) வகை மஷ்ரூம்களை சேர்த்துக்கொள்வதே ஆகும்.
இந்த வகை மஷ்ரூம்களில், எர்கோதியோனெய்ன் (Ergothioneine) என்றதொரு கூட்டுப்பொருள் உள்ளது. அதிலுள்ள அரிய வகை அமினோ ஆசிட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கொழுப்புகள் ஆக்ஸிடைஸ் ஆவதைத் தடுக்கவும், உடலிலுள்ள வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. ஸ்பெர்மிடைன் (Spermidine) என்ற இன்னொரு கூட்டுப்பொருளும் இந்த வகை மஷ்ரூம்களில் உள்ளது.
இதிலுள்ள ஆர்கானிக் மூலக் கூறுகள் (Molecules), செல்களின் சிதிலமடைந்த பாகங்களை சீக்கிரமாக நீக்கி, சுத்தப்படுத்தி, செல்களை புதுப்பிக்கும் செயல்பாடுகள் துரிதமாக நடைபெற உதவி புரிகின்றன.
மஷ்ரூம்கள், "ஓல்ட் பீபில் ஸ்மெல்"லை அடியோடு போக்க மட்டுமின்றி, உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவி புரிகின்றன. வயதானோர் மட்டுமின்றி, நடுத்தர வயதுடையோர் மற்றும் இளைஞர்களும் உயர் ரக மஷ்ரூம்களை உட்கொண்டு 2-னோனெனால் உற்பத்தியை தடுத்து, இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)