'ரணம் அறம் தவறேல்’ - வைபவ் 25 - வெற்றிபெறுமா?

Vaibhav Reddy
Vaibhav Reddy

நம்ம வீட்டு பையனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஹீரோக்களில் ஒருவர் வைபவ். நாளை வைபவ் நடித்து 'ரணம் அறம் தவறேல் ' திரைப்படம் வெளிவர உள்ளது. இது வைபவ் நடிப்பில் வெளிவரும் இருப்பதைந்தாவது படமாகும்.

திறமை வாய்ந்த நடிகர்கள் பலருக்கு சினிமா துறையில் டாப் இடத்தில் வலம் வர சரியான நேரம் அமைவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விக்ராந்த், விஷ்னு விஷால், வைபவ் போன்ற நடிகர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், ரசிகர்களுக்கு இவர்களின் திறமையின் மேல் எந்த சந்தேகமும் இல்லை என்பதை ஆணித்தரமாக் கூற முடியும். திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோக்கள் இவர்கள்.

அந்தவகையில் வைபவ் பல நல்ல படங்களை ரசிகர்களுக்குக் கொடுத்து வந்தார். நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும், காதல் பாயாகவும் நடித்து வித்தியாசமான படங்களைக் கொடுத்தார். கதைக்களம் சுமாராக இருந்த ஒருசில படங்களிலும் கூட தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை வைபவ் பூர்த்தி செய்துள்ளார் என்பதே உண்மை.

Vaibhav Reddy
Vaibhav Reddy

வைபவ் நடிப்பில் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இது இவரின் 25வது படமாகும். இப்படத்தை இயக்குனர் செரிஃப் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நந்தித்தா ஸ்வேதா, தன்யா ஹோப் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது இது ஒரு த்ரில்லர் படம் என்பது தெரியவருகிறது. இப்படத்தில் வைபவ் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் க்ரைம் ஓவியராக ஒரு விசாரணைக்குள் நுழைந்து வில்லனை கண்டுப்பிடிக்க போலிஸாருக்கு உதவுகிறார்.  வைபவின் கதாப்பாத்திரம் எப்போதும் போல் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு கண்டிப்பான கதாப்பாத்திரமாக உள்ளது. இப்படம் வைபவிற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைபவின் தந்தை ஏ.கோதண்டராம் ‘டோலிவுட்’ திரையுலகின் சிறந்த இயக்குனர் ஆவார். வைபவ் 2007ம் ஆண்டு ‘கோதவா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். பின்னர், 2008ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சரோஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்தான் வெங்கட்பிரபு, ப்ரேம் ஜீ ஆகியோர் வைபவிற்கு நெருங்கிய நண்பர்களாக கிடைத்தார்கள். பிற்பாடு வெங்கட்பிரபு படங்களில் ப்ரேம் ஜீ, வைபவ் ஒரு சிறு கேமியோ ரோலிலாவது நடிப்பது வழக்கமானது.

இதையும் படியுங்கள்:
அவதூறு பரப்பிய விவகாரம்... மன்னிப்பு கேட்க வேண்டும் என த்ரிஷா நோட்டீஸ்!
Vaibhav Reddy

வைபவ் நடித்த 'கோவா’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மாஸ் ஹிட் ஆனது. ஈசன், அனாமிகா, ஆம்பள, அரண்மனை 2, ஹலோ நான் பேய் பேசுறேன், கப்பல், இறைவி, முத்தின கத்திரிக்காய், சென்னை 600028, மேயாத மான், பெட்ரோமேக்ஸ், காட்டேரி உட்பட இதுவரை 24 படங்களில் வைபவ் நடித்துள்ளார்.

தான் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, வெற்றி பெறக்கூடிய படங்களில் தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவர் வைபவ். இந்த எண்ணமே அவருக்கு பலம் சேர்க்கிறது. அஜித் நடித்த மங்காத்தா, சசிகுமாரின் பிரம்மன் மற்றும் ஈசன் அர்ஜுன் நடித்த நிபுணன், சுந்தர்.C யின் அரண்மனை 2 இப்படி வைபவ் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக சாதாரணமாக நடிப்பை தருவதில் வல்லவர் வைபவ். நகைச்சுவை நடிப்பில் தனக்கான தனி பாணியை உருவாக்கி உள்ளார்.

குறிப்பாக ‘மேயாத மான்’ படத்தில் இவரின் நகைச்சுவை நடிப்பு பற்றி இன்று வரைப் பேசப்படுகிறது. அப்படத்தில் ஒருதலை காதலிலும், தங்கச்சி சென்டிமென்ட்டிலும் அவர் நடித்திருந்தது நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படம் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாத ஒரு குடும்பப் படமாகும்.

வைபவின் 25வது படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் வைபவுக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பாக அமையும் என்பதை ட்ரைலரே கூறுகிறது .

இந்த ஆண்டு ‘ரணம் அறம் தவறேல்’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்திலும் வைபவ் நடிக்கவுள்ளார். அதேபோல ‘ஆலம்பனா’ என்ற படமும் அவரிடம் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகும் 'ரணம் அறம் தவறேல்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வைபவ் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஹிட்கொடுத்து, சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருவதற்கு மனமார வாழ்த்துகிறோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com