SJ Surya
SJ Surya

நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?

Published on

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் வாய்ப்புக்காக ஏங்கிய பல நடிகர்கள், இன்று உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர். அப்படி இன்றைய காலகட்டத்தில் வளர்ந்திருக்கும் ஒரு நடிகர் தான் எஸ்ஜே சூர்யா. தொடக்கத்தில் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால், இயக்குநர் அவதாரம் எடுத்தார். தல அஜித்தை வைத்து வாலி, தளபதி விஜய்யை வைத்து குஷி ஆகிய இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் எஸ்ஜே சூர்யா.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தான் இயக்குநராகி விட்டதாக அவரே ஒருமுறை சொல்லியிருக்கிறார். தல, தளபதியை இயக்கிய பிறகு நியூ மற்றும் இசை ஆகிய படங்களை இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்தார். மேலும் வியாபாரி, திருமகன், கடமையை செய் மற்றும் மான்ஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் பிறகு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் வில்லன் அவதாரம் எடுத்தார் சூர்யா. ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார் எஸ்ஜே சூர்யா.

வை ராஜா வை, டான், மார்க் ஆண்டனி, மெர்சல், மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ராயன் போன்ற திரைப்படங்களை இவரது நடிப்புத் திறனுக்கு சான்றாக கூறலாம். நானி நடிப்பில் இந்தாண்டு வெளியான சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி தெலுங்கிலும் தடம் பதித்தார் எஸ்ஜே சூர்யா. தொடக்கத்தில் சினிமா பக்கமே வராத இவர், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவரது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே தனக்கான வேலையைத் திறம்படச் செய்தது தான்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பு, ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்ஜே சூர்யா. அப்போது இந்த வேலை எனக்கானது அல்லவே! என் பாதை வேறு; ஆனால் இங்கே இப்படி டேபிளைத் துடைத்துக் கொண்டிருக்கிறோமே என ஒரு நாளும் அவர் வருத்தப்பட்டதே இல்லையாம். ஏனெனில் இப்போது இது எனக்கான வேலை. எனது வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. நாம் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது எல்லாம் பிறகு தான். இன்றைக்கு எனக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தை ஏற்று அதனைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணி, ஒவ்வொரு நாளும் அதனைச் செய்து முடிப்பாராம் எஸ்ஜே சூர்யா.

இதையும் படியுங்கள்:
நடிப்பு அரக்கனின் கைவசம் இத்தனைப் படங்களா!
SJ Surya

சர்வர் வேலையைத் தரக்குறைவாக எண்ணாமல், தனக்கான வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணியதே, எஸ்ஜே சூர்யா இன்று உச்ச நட்சத்திரமாக வளர்வதற்கு காரணம். இவரது இந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்தது அல்ல. பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு தான் இவர் வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார்.

உண்மையைச் சொல்வதென்றால் இந்த எண்ணம் நம்மில் பலருக்கும் வருமேயானால், நிச்சயம் நாமும் ஒருநாள் வெற்றிப்பாதையில் பாதையில் பயணிப்போம். ஏனெனில் செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா!

logo
Kalki Online
kalkionline.com