தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் எஸ்ஜே சூர்யா, தற்போது பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது கைவசம் எத்தனைப் படங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஹீரோ அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஹீரோக்களுக்கு இணையான நடிப்புத் திறனை வில்லன்களும் தருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வில்லன் ரோலில் தனது திறமையை மிகச் சிறப்பாக நிரூபித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா.
எஸ்ஜே சூர்யாவின் சினிமா பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தான் தற்போது தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கிறார். உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய எஸ்ஜே சூர்யாவுக்கு, படம் இயக்குவதற்கான முதல் வாய்ப்பை அளித்தவர் தல அஜித் தான். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தல அஜித்தை இயக்கியவர் தளபதியை மட்டும் விட்டு வைப்பாரா என்ன! குஷி படத்தை இயக்கி தளபதி விஜயுடனும் கைகோர்த்தார். இந்தப் படமும் மெகா ஹிட் படமாக அமைந்தது.
தல, தளபதிக்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா, முதலில் நடிப்பதற்காகவே சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், இயக்குநராகி விட்டார். அடுத்ததாக நியூ மற்றும் இசை ஆகிய படங்களை இயக்கி, அவரே நடித்தார். இதுதவிர்த்து வியாபாரி, திருமகன், கடமையை செய், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், வில்லன் அவதாரம் எடுத்தார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் எஸ்ஜே சூர்யா. இதன் பிறகு இவருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வை ராஜா வை, டான், மார்க் ஆண்டனி, மெர்சல், மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ராயன் போன்ற திரைப்படங்களை இவரது நடிப்புத் திறனுக்கு சான்றாக கூறலாம். இந்நிலையில், நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்புத் திறனைக் கண்டு கோலிவுட் வட்டாரம் இவருக்கு 'நடிப்பு அரக்கன்' என்ற பெயரை மகுடமாய் சூட்டியது.
தற்போது இவர் கைவசம் கேம் சேஞ்சர், வீர தீர சூரன், உயர்ந்த மனிதன், இந்தியன் 3, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் சர்தார் 2 போன்ற படங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கியவர், இன்று தவிர்க்க முடியாத தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும், தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார்.