ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியானப் படம் லால் சலாம். பிப்ரவரி 9ம் தேதித் திரையரங்கில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அதனால் லால் சலாம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது. அந்தவகையில் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்றுப் படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.
லைகா தயாரிப்பில் உருவான இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் ரஜினிகாந்த் தன் மகளுக்காக கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்து அப்படத்தில் நடித்தார். ரஜினி இப்படத்தில் கேமியோ ரோல் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் லால் சலாம் படம் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது.
அதேபோல் ஐஸ்வர்யாவும் 3, வை ராஜா வை போன்ற ஹிட் படங்களுக்கு அடுத்து ஒரு பெரிய ஹிட் படம் கொடுக்கப் போகிறார் என்றே அனைவரும் நினைத்தனர். தேசிய விருது வாங்கும் படம், உண்மைக் கதை என்றெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறினார். ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த மாதிரியான எந்த ஃபீலையும் கொடுக்கவில்லை. இதுதான் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
அந்தவகையில் படத்தின் தோல்விக்கான காரணத்தைப் பற்றி ஐஸ்வர்யா என்னக் கூறினாரென்றால், "ரஜினிகாந்த் கதாப்பாத்திரமான மொய்தீன் பாய் இடைவெளிக்குப் பிறகே கொண்டு வரவேண்டுமென்று முதலில் திட்டம் தீட்டினேன். ஆனால் கமர்சியல் படமென்பதால் சூப்பர் ஸ்டாரை முதலிலேயே காட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது என்ன செய்வதென்று அறியாமல் கடைசி இரண்டு நாட்களில் எடிட்டிங் மூலம் மொய்தீன் பாய் காட்சியைப் படத்தின் முன் பகுதியில் வைத்தேன். அதுதான் மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்தப் படத்தில் செந்தில் கதாப்பாத்திரம்தான் கதையின் நாயகன். ஆனால் ரஜினிகாந்த் உள்ளே வந்ததும் மொய்தீன் பாயை கதாநாயகனாக ரசிக்க ஆரம்பித்தனர். இதுவே தோல்விக்கு மற்றொரு காரணம்“ என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.