
இன்றைய தமிழ் சினிமா படங்களில் பழைய பாடல்கள் இடம் பெறுவது டிரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது. சில படங்களை ரசிகர்கள் தியேட்டரில் மகிழ்ச்சியாக கண்டுகளிப்பதற்கு மிக முக்கிய காரணமே பழைய பாடல்கள் தான் என்றும் கூறப்படுகிறது. பழைய பாடல்களின் மூலம் சில நடிகர், நடிகைகளும் இப்போது பிரபலமாகி வருகின்றனர். இந்நிலையில் புதுப்படங்களின் வெற்றிக்கு பழைய பாடல்களின் பங்கு மற்றும் இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
ஏற்கனவே ரிலீஸான ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலையோ அல்லது வசனத்தையோ வேறொரு படத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால், முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் காப்புரிமை பிரச்னை ஏற்பட்டு விடும். அப்படி பழைய பாடல்களைப் பயன்படுத்தும் போது படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் மட்டும் போதும் என, இன்றைய இயக்குநர்கள் நினைக்கின்றனர். இது சரிதான் என்றாலும், அப்படத்தின் இசையமைப்பாளரிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்ற கருத்து நிலவுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
முன்பெல்லாம் இசையமைப்பாளருக்கு படத்தில் வேலை செய்ததற்கு சம்பளம் மட்டுமே கொடுக்கப்படும். படத்தின் மொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கு சென்று விடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் சம்பளம் வாங்குவதோடு ராயல்டியும் வாங்குகிறார்கள். இதனால் பாடல்கள் எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டாலும் அதற்கான பங்களிப்பு இசையமைப்பாளருக்கும் கிடைக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் பழைய பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு விதை போட்டவரே லோகேஷ் கனகராஜ் தான் என்று சொல்கிறது கோலிவுட். அவரைப் பார்த்து தான் இன்றைய இளம் இயக்குநர்கள் பழைய பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்களாம். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், இசையமைப்பாளர்களுக்கான வேலைப்பளு குறைந்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது.
எங்களின் பழைய பாடல்களால் தான் இன்றைய புதுப் படங்கள் பலவும் வெற்றி பெறுகின்றன என சமீபத்தில் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
“கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கியும், நாங்கள் இசையமைத்த பாடல்களை இன்றைய இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். அப்படியெனில் எங்கள் பாடல்களால் தான் படங்கள் வெற்றி பெறுகின்றன. பழைய பாடல்கள் திரையில் ஒலிக்கும் போது ரசிகர்கள் ஆராவாரம் செய்து விசிலடித்து மகிழ்கின்றனர். இது எங்கள் பாட்டுக்கு கிடைத்த வெற்றி தான். அவர்களால் செய்ய முடியாததை எங்கள் பாட்டு தான் செய்கிறது.
தயாரிப்பாளரிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமா? இசையமைப்பாளரிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டியது அவசியம். இதனால் தான் எங்கள் அண்ணன் இளையராஜாவுக்கு கோபம் வந்து விட்டது. பணத்தின் மீதான ஆசையால் இதை அவர் கேட்கவில்லை. எங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. நியாயமான அனுமதியைக் கேளுங்கள் என்று தான் சொல்கிறோம். எங்களிடம் உரிய முறையில் அனுமதி கேட்டிருந்தால் மகிழ்ச்சியாக சம்மதித்திருப்போம். ஆனால், யாரும் அப்படி அனுமதி கேட்பதில்லை” என அவர் கூறினார்.