தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சினிமாவில் தனக்கான கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக ஏற்று நடிப்பவர். தொடக்க காலத்தில் இவரது படங்கள் தோல்வியை சந்தித்தாலும், நந்தா படத்தின் மூலம் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். நடிப்பில் மட்டுமல்லாது தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பட்டையைக் கிளப்புவார் சூர்யா. அவ்வகையில் இவர் தனது சினிமா பயணத்தில் எத்தனைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.
தற்போது சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ‘லவ் டீடாக்ஸ்’ என்ற பாடலை நடிகர் சூர்யா தான் பாடினார் என்பதை படக்குழு தெரிவித்தது. ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கடின உழைப்பால் தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சூர்யாவின் முதல் பாடல் அல்ல இது. சூர்யாவின் ஹிட் படங்களைத் தெரிந்த அளவிற்கு, அவர் பாடிய பாடல்கள் எத்தனை என்பது பலருக்கும் தெரியாது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா, 2014 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் பின்னணிப் பாடகராக அவதாரம் எடுத்தார்.
லிங்குசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் ‘ஏக் தோ தீன் சார்’ பாடலை ஆண்ட்ரியா உடன் இணைந்து பாடினார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், சூர்யா பாடிய இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சூர்யாவுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘மாறா தீம்’ பாடலையும் பாடியுள்ளார் சூர்யா. அதோடு இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும், அதே உத்வேகத்தோடு ‘மகா தீம்’ பாடலை பாடினார்.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து, இன்னும் திரைக்கு வராமல் இருக்கும் படம் பார்ட்டி. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘சா சா சாரி’ என்ற பாடலை பாடியிருக்கிறார் சூர்யா. இப்பாடலை கார்த்தி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கரிஷ்மா ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.
திரைப்படங்கள் தவிர்த்து சன்ரைஸ் காஃபி விளம்பரத்திலும் ஒரு சிறிய பாடலை பாடியிருக்கிறார் நடிகர் சூர்யா.