Rebel movie review in tamil
Rebel movie review in tamil

விமர்சனம்: ரெபல் - மூணாறு பின்னணியில் ஒரு மசாலா படம்! அவ்வளவே!

ரேட்டிங்:(2.5 / 5)

தேர்வு மற்றும் தேர்தல் காரணமாக தமிழ் நாட்டு தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகும் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளியாகும் ஒரு சில தமிழ் படங்களும் "இதுக்கு பேசாம பஞ்சு மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" என்ற ரேஞ்சில் தான் இருக்கின்றன. இதை போன்ற ஒரு படம் தான் G. V. பிரகாஷ் நடிப்பில் வந்திருக்கும் ரெபெல்.

1980 கள் காலகட்டம். மூணாறு தேயிலை தோட்டத்தில் தமிழ் தொழிலார்களின் பிள்ளைகள் பாலக்காடு நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு படிக்க செல்கிறார்கள். அங்கே உள்ள மாணவர்கள் இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே அவமானப் படுத்தப் படுகிறார்கள். ராக்கிங் செய்யப்படுகிறார்கள். இந்த பிரச்சனையில் ஒரு தமிழ் மாணவர் கொல்லப்பட பொங்கி எழும் நம்ம ஹீரோ கதிர் (G V பிரகாஷ் ) பிரச்சனை செய்யும் மாணவர்களை அடித்து நொறுக்குகிறார். இந்த பிரச்சனைக்கு பின்னால் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இருப்பதை உணர்ந்து தமிழ் மாணவர்களை திரட்டி மாணவர் தேர்தலில் நிற்கிறார் கதிர். தேர்தலில் நிற்கும் கதிரை இரண்டு பெரிய கட்சிகளும் டார்ஜர் செய்கின்றன. இதை கதிர் எதிர் கொள்வதுதான் மீதிக் கதை.

கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல போகிறார்கள் என்று நாம் நினைக்கும் முன்பே படம் கல்லூரிக்கு சென்று விடுகிறது. சரி, பரவாயில்லை கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மோதல்களை பேசப் போகிறது என்று நினைத்தால் நல்லா ஏமாந்தீங்களா என்று திரைக்கதை நம்மை பார்த்து சிரிக்கிறது. எதை எதையோ சொல்ல நினைத்து ஒரு சாதாரண மசாலா படமாக செல்கிறது 'ரெபெல்'.

இதையும் படியுங்கள்:
25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான்!
Rebel movie review in tamil

படத்தில் ஹீரோவுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் கண்டிப்பாக ஒரு காதலி இருக்க வேண்டுமே! மமிதா இந்த காதலிக்கும் வேலையை செய்கிறார். வில்லனாக நடிக்கும் வெங்கிடேஷ், விளிம்பு நிலை மாணவனாக நடிக்கும் ஆதித்யா பாஸ்கர் (இவர் நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகன்) ஆகியோரின் நடிப்பு OK. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இன்னும் சிரத்தை காட்டி இருக்கலாம்.

படத்தில் உண்மையாக பாராட்ட பட வேண்டிய அம்சம் அருணின் ஒளிப்பதிவு தான். மூணாரின் குளிர்ச்சி திரையில் கொண்டு வந்து விட்டார் அருண். ரெபெல் என்றால் புரட்சியாளர் என்று பொருள். இந்த படத்தில் யார் என்ன புரட்சி செய்தார்கள் என படம் பார்க்கும் போது புரியவில்லை என்றாலும் இந்த படம் முடிந்த பின்பு படம் பார்த்த ரசிகர்கள்தான் மிக பெரிய புரட்சியாளர்கள் என புரிந்து கொள்ள முடிந்தது!

logo
Kalki Online
kalkionline.com