

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை பற்றி மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் உதயநிதி நிர்வாகத்தில் இருந்த, அவர்களது பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாரம் ஒரு முறை, ஒரு திரைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தது. திமுக ஆட்சியில் மொத்த தமிழ் சினிமாவையும் அவர்களது கட்டுக்குள் வைத்திருந்ததாக அமைச்சர் பேசி இருந்தார்.
அப்போது, அவர் கடந்த நான்கு வாரங்களாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏன் திரைப்படங்களை வெளியிடவில்லை? என்று கேட்டிருந்தார். தமிழ் சினிமாவில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு, தங்களது ஆட்சி முடிவு கட்டி உள்ளதாக ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். தமிழகத்தில் இனி எந்த தயாரிப்பாளரையும் மிரட்ட முடியாது, திரைப்படங்களை வாங்குவதோ தியேட்டர்களில் வெளியீடு செய்வதில் பிரச்சனை எதுவும் செய்ய முடியாது.
தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் பயமுறுத்தும் காலங்கள் முடிந்து விட்டதாக அவர் பேசியிருந்தார். தங்களது ஆட்சியில் முன்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் செயற்பட்டது போல் இப்போதும் செயல்பட முடியாது. அதனால் தான் அவர்கள் தற்போது திரைப்படங்களை வெளியிடாமல் இருக்கின்றனர். இனிமேல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட முடியாது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் உருவான 'கட்டாகுஸ்தி- 2 ' திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டு இருந்தது. மேலும் இந்த மாதம் 10ஆம் தேதி அதர்வா நடிப்பில் உருவாகி இருந்த 'இதயம் முரளி' திரைப்படத்தையும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக விநியோகம் செய்ய உள்ளது. முந்தைய ஆட்சி காலங்களில் செயல்பட்டதை போலவே வாரம் வாரம் திரைப்படங்களை வெளியிடுவதற்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
இது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை , மிகவும் பிரம்மாண்டமான முறையில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார், அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் ,படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு, இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
2008 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தனது தலைமையில் நிறுவியிருந்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக விஜய் நடிப்பில் உருவான ' குருவி' திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக அவர்களால் தயாரிக்கப்பட்டன. அதை தொடர்ந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி ' திரைப்படத்தின் மூலமாக உதயநிதி நடிகராக அறிமுகமானார்.
உதயநிதி நடிப்பில் " இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , மனிதன், கலகத் தலைவன்" உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதேபோல் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் "வணக்கம் சென்னை , காதலிக்க நேரமில்லை" போன்ற திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக திரைப்படங்களை வெளியிட உள்ளதால், அமைச்சரின் சவால் முறியடிக்கப்பட்டதா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.