

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவிலேயே கொஞ்சம் வித்தியாசமான நடிகர் மற்றும் எதார்த்தவாதியாகவும் இருந்து வருகிறார். தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அந்த வழியில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார். அஜித்தின் நடவடிக்கைகள், சினிமாத்துறைக்குள் இருந்தவர்களை பல இடங்களில் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இவர் கார் ரேஸ் மீது உள்ள தீராத காதலால் சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி விட்டு கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் குமார் கார் ரேசிங் என்ற நிறுவனத்தையும் தொடங்கி கார் பந்தயக் குழுவை உருவாக்கியுள்ளார்.
அஜித் குமார் ரேசிங் அணி, துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த அணி, 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தது.
தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவை உலக மோட்டார்ஸ்போர்ட் விளையாட்டில் தடம் பதிக்க வைப்பதே இந்த அணியின் முக்கிய நோக்கம் ஆகும்.
அஜித் கார் பந்தயங்களில் கவனம் செலுத்துவதற்காக வெளிநாடுகளில் தங்கி இருந்து தினந்தோறும் அதிகநேரம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயக் குழுவுடன் முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (RCPL) நிறுவனம், இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனத்தின் முதன்மை எனர்ஜி டிரிங்க் பிராண்டான கேம்பா(Campa Energy), அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்பட உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்றும், இதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கூட்டணி முயற்சி இரண்டு பிராண்டுகளுக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பா எனர்ஜியின் ஆதரவுடன், அஜித் குமார் ரேசிங் அணி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.