தங்கர் பச்சான் இயக்கத்தில், பார்த்திபன் நடிப்பில், 2002ம் ஆண்டு வெளியான ‘அழகி’ படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கில் தற்போது ரிலீஸ் ஆகும் புதுப்படங்களைவிட பழைய படங்களே ரீரிலீஸில் வரவேற்பைப் பெருகின்றன. வந்தால் ஒரே நேரத்தில் நல்ல படங்கள் வரும், இல்லையென்றால் ஒரு படம் கூட வராது. இதுதான் சினிமாவின் ப்ளஸ் மற்றும் மைனஸ். தற்போது மலையாளப் படங்கள் தமிழகத்தில் ஒரு புயலாக வந்து இப்போதுதான் ஓய்ந்து வருகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் வருமானமும் அள்ளினார்கள்.
இதனையடுத்துப் பழைய யுத்தியைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்றுத் திரையரங்கு உரிமையாளர்கள் ரீரிலீஸை கையில் எடுத்துள்ளனர். வாலி, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோஹினி போன்ற பல பழைய படங்கள் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூலை ஈட்டினார்கள்.
அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான அழகி படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதில் தேவையானி, நந்திதா தாஸ், மோனிகா ஆகியோரும் நடித்திருந்தனர். பள்ளியில் வரும் முதல் காதலை மையமாக வைத்து தங்கர் பச்சான் ஒரு ஃபீல் குட் படத்தை எடுத்திருப்பார். பள்ளியில் ஏற்பட்ட காதல், அதன்பின் பெரிய இடைவெளிக்குப் பிறகு காணும்போது எப்படியிருக்கும் என்பதையும் இயக்குனர் அழகாகக் காண்பித்திருப்பார்.
படத்தின் கதையையும் பார்த்திபனின் நடிப்பையும் கூட்டிக் காண்பித்தது இளையராஜாவின் இசையே. அந்தவகையில் 'ஒளியிலே தெரிவது தேவதையா?', 'உன் குத்தமா என் குத்தமா' போன்றப் பாடல்கள் இன்றும் இளைஞர்களின் ஃபேவரட் பாடல்களாகத்தான் உள்ளன.
மேலும் அழகி படத்தில் இடம்பெற்ற 'பாட்டுச் சொல்லி' பாடலைப் பாடிய சாதனா சார்கம் சிறந்தப் பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வாங்கினார்.
இப்படம் ஜனவரி 14ம் தேதி 2002ம் ஆண்டு வெளியானதால் இது ஒரு 22 வருடப் பழமை வாய்ந்தப் படமாகும். ஆனாலும் கதையின் தரமும் இசையின் தரமும் குறையாத இப்படத்தை விஷ்வல் தரத்தைப் புதுப்பித்து வரும் மார்ச் 29ம் தேதி ரீரிலீஸ் செய்யவுள்ளனர்.
இதனையடுத்து வெங்கட் பிரபு அழகி படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஒருத் தூய காதலின் கதை என்று பதிவிட்டு ட்வீட் செய்திருக்கிறார்.