விமர்சனம்: ரெட்ட தல - நோ லாஜிக்! நோ புதுமை!
ரேட்டிங்(2.5 / 5)
அருண் விஜய், சித்தி இடானி, தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் வந்துள்ள படம் ரெட்ட தல.
பாண்டிச்சேரியில் வேலை இல்லாமல் எந்த வித ஆதரவும் இல்லாமல் இருப்பவர் காளி (அருண் விஜய்). ஒரு நாள் எதிர்பாராதவிதமாக தோற்றத்தில் தன்னை போல இருக்கும் ஒரு நபரை பாண்டிச்சேரியில் சந்திக்கிறார். அந்த நபர் பெரும் பணக்காரர். இவரை கொலை செய்தால், தான் பெரிய பணக்காரர் ஆக முடியும் என காதலி சித்தி தரும் ஐடியாவை பின்பற்றி தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை கொலை செய்து விடுகிறார். கொலை செய்து சில நாட்கள் சென்ற பின் தான் கொலை செய்தது கோவாவில் இருக்கும் பெரிய டான் உபேந்திரா என்று தெரிய வருகிறது.
ஒரு பக்கம் போலீஸ் மற்றொரு பக்கம் உபேந்திராவின் எதிரிகள் என இரண்டு பக்கமும் காளியை முடிக்க துரத்துகிறார்கள். இவர்களில் யார், யாரை முடித்தார்கள் என்று சொல்கிறது ரெட்ட தல.
படம் தொடங்கி உபேந்திராவை கொலை செய்யும் வரை ஒரு நல்ல ஆக்ஷன் திரைக்கதை கொண்ட ஒரு த்ரில்லர் படத்திற்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை தந்தது. ஆனால் இதன் பிறகு வரும் காட்சிகள் நம் நினைவை பொய்யாகி விடுகின்றன.
கதை நகராமல் ஒரே இடத்தில நிற்பேன் என அடம் பிடிக்கிறது. காளி, உபேந்திரா இரண்டு கதாபாத்திரத்தையும் உருவாக்கிய விதத்தில் தெளிவு இல்லை. உபேந்திரா சைக்கோவா, டானா அல்லது சைக்கோ தனம் கலந்த டானா என்ற குழப்பமே இருக்கிறது. படம் முடிவதற்கு பதினைந்தது நிமிடத்திற்கு முன்பு காளிக்கு தரும் ட்விஸ்டும், பில்ட்டப்பும் சிரிப்பை வர வழைத்து குறையை சற்றே போக்கி விடுகிறது.
நடிப்பை பொறுத்த வரையில் ஸ்டைலிஷாகவும், ஆக்ஷனிலும் உபேந்திரவாக வரும் அருண் விஜய் ஸ்கோர் செய்கிறார். இரண்டு ஹீரோயின்களில் சித்தி இடாணி சிறிது நடிக்க முயற்சி செய்திருக்கிறார். தன்யா ரவிசந்திரன் சிரிக்கிறார். சிறிது கோபப்படுகிறார். வேறெதுவும் செய்யவில்லை. ஜான் விஜய், தான் செய்வது, காமெடியா அல்லது வில்லத்தனமா என்று முடிவு செய்து விட்டு அடுத்த படத்தில் நடித்தால் பரவாயில்லை. ஒரே போன்று மேனரிசத்தில் அனைத்து படங்களிலும் நடித்து போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறார்.
படத்தில் குறை சொல்வதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், படத்தை பாராட்ட இருக்கும் ஒரே விஷயம் டிஜோ டாமின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொவரு பிரேமும் (frame) ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. காட்சிகளில் ஒரு ரிச்னஸ் தெரிகிறது. சாம் சி.எஸ் இசை இந்த ரிப்பீட் மோடில் இல்லாமல் சற்று புதுமையாக இருக்கிறது. ரெட்ட தல - ஒளிப்பதிவில் இருக்கும் நேர்த்தி கதையில் இல்லை.

