
பதின்ம வயது பிள்ளைகளின் உலகைப் பெற்றோர்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று சொல்லும் ஒரு முக்கியமான தொடர்.
நான்கே அத்தியாயங்கள். ஒரு மணிநேரம் வரை ஓடக்கூடியவை. குறைந்த பட்சக் கதாபாத்திரங்கள். மிக மெதுவாக நகரும் காட்சிகள். ஆனால், நம்மைக் கட்டிப் போடுவது மேக்கிங்கில் இவர்கள் செய்திருக்கும் மேஜிக். ஆம். அனைத்தும் சிங்கிள் ஷாட் எபிசோட்கள். அசுரத்தனமான உழைப்பும், திட்டமிடலும் ஒத்திகைகளும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை.
பதின்ம வயது சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை எப்படிப்பட்டது. இது போன்ற சமூக ஊடகங்கள் அவர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன. ஏன் பெற்றவர்கள் தங்கள் மக்களின் சமூக வலைத்தளத் தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும்?
பிள்ளைகள் கேட்கிறார்கள் என அவர்கள் விரும்பும் அனைத்துப் பொருள்களையும் வாங்கிக் கொடுப்பதோடு பெற்றவர்களின் பொறுப்பு முடிவதில்லை.
அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுடன் சரியான அளவு சரியான நேரம் செலவழிப்பதும் எத்தனை அவசியமானது! அத்தியாவசியமும் கூட. இதை மிகத்தெளிவாகச் சொல்லியுள்ள 'அடலசன்ஸ்' பெற்றோர்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையினரும் தவற விடக்கூடாத ஒரு தொடர் தான்.
தொலைக்காட்சித் தொடர்களில் சில தொடர்கள் அபூர்வமாக நன்றாக அமைந்து விடுவதுண்டு. அப்படியொரு தொடர் தான் குற்றம் புரிந்தவன். சோனி லிவில் வெளியாகியுள்ள இந்தத் தொடரில் பசுபதி, லிஸ்ஸி ஆண்டனி, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, விதார்த் உள்படப் பலர் நடித்துள்ளனர். ஒரு திருவிழாவின் போது மெர்சி என்ற சின்னப் பெண் காணாமல் போகிறாள். அவளது தந்தை மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.
அந்தப் பெண்ணைக் கடத்தியது யார். தந்தை எப்படி இறந்தார். இப்படித் தான் தொடங்குகிறது இந்தக் கதை. ஒரு காரியத்தை பசுபதி ஏன் செய்தார். இந்தக் கடத்தல் தனியானதா இல்லை முன்னதாக நடந்த கடத்தல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை அலசுகிறது இந்தத் தொடர். இந்த ஆண்டு வந்ததில் மிக முக்கியமான அதே சமயம் நல்ல வரவேற்பையும் பெற்றது இந்தத் தொடர். விதார்த், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேசப்பட வேண்டிய ஒரு சம்பவத்தைப் பின்னணியாக வைத்துக் கண்ணியமாக அமைந்த ஒரு தொடர் இது.
பேமிலி மேன் மூன்றாவது சீசன் வரப்போகிறது என்றதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆறு ஆண்டுகளில் இது மூன்றாவது சீசன். ஒவ்வொரு சீஸனும் உச்சக்கட்டப் பரபரப்பில் முடியும். காத்திருக்க வைக்கும். 2021 இல் இரண்டாவது சீசன் முடிந்தது. 2025 இல் இது மூன்றாவது சீசனாக வந்திருக்கிறது. எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு முழுமையான திருப்தி அளித்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
வில்லன் பாத்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த முறை மனோஜ்க்குக் கொடுக்கவில்லையோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த சீசனுக்காகக் காத்திருக்கலாமா என்றால் வேறு வழி. இதெல்லாம் ஒரு போதை. வரும்போது பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற வைக்கும்.
ஷாருக்கானின் மகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு தொடர் இது. ஷாருக் மகன் ஆயிற்றே கேட்க வேண்டுமா? நட்சத்திரப் பட்டாளங்கள் அணிவகுத்து வருகின்றனர். சல்மான், ஆமிர்கான், ராஜமவுலி ஷாருக்கான் உள்ளிட்ட அனைவரும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு மூத்த நடிகருக்கும் வளர்ந்து வரும் நடிகருக்கும் நடைபெறும் ஈகோ போராட்டம் தான் கதை.
அதற்குள் காதல், நட்பு, லட்சியம், எல்லாம் வருகிறது. பாலிவுட்டில் நடைபெறும் போதைக் கலாச்சாரம், பார்ட்டிகள், போராட்டங்கள், நிழலுலக தாதாக்கள், அரசியல்வாதிகள் என அனைத்தும் இறக்கி இருக்கிறார் ஆரியன் கான். முதலில் தந்தையின் புகழில் கிடைத்து விட்டது என்று இதற்கும் பேசப்பட்டது. ஆனால் எந்தவிதமான பாசாங்குமின்றி உள்ளிருந்தே அந்தத் திரையுலகத்தைத் தோலுரித்து விட்டார் அவர். அவரைத் தவிர வேறு யாராவது இப்படி எடுத்தால் ஒத்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஒலிப்பதிவு, இசை, என அனைத்தும் தரமாக அமைந்துள்ளது. அதிலும் அந்தக் கடைசி நிமிட டுவிஸ்ட் அது தான் மொத்த சீரீஸின் ஹைலைட்.
கை ரிச்சி தயாரிப்பில் வெளியாகியுள்ள ஆங்கிலத் தொடர் தான் மாப் லேண்ட். பியர்ஸ் பிராஸ்னன், டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகியுள்ள இந்தத் தொடர் சண்டை பிரியர்களைக் கவரக்கூடிய ஒன்றாக வந்திருக்கிறது. லண்டனை அடக்கியாளும் இரண்டு தாதாக்கள். அதில் ஒருவரான பியர்ஸ் பிராஸ்னன் உதவியாளராகவும் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைக் கையாளும் திறமை பெற்றவராக டாம் ஹார்டி. இந்தக் கும்பலுக்குள் நடக்கும் போட்டிகள், தாக்குதல்கள், இதில் சுயலாபம் அடையப் பார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி என்று செல்கிறது. விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத தொடர் இது.
நெட்பிளிக்ஸ் எப்பொழுது இந்தத் தொடர் பற்றிய டீஸர் அல்லது அறிவிப்புகள் வெளியிட்டாலும் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த அளவு ரசிகர்களைக் கவர்ந்த தொடர் இது. ஒரு விளையாட்டு. உயிரைப் பணயம் வைத்துத் தான் ஆட வேண்டும். வென்றவர்களுக்குக் கோடிக்கணக்கில் பரிசுப் பணம். பணம் எப்படி மனிதர்கள் கண்களை மறைக்கிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குப் போகிறார்கள் என்று பட்டவர்த்தனமாகக் காட்டும் தொடர் தான் இது.
விளையாட்டுக்கள் சிறுபிள்ளைத் தனமாகத் தெரிந்தாலும் உயிர் போகும் தருணங்கள் சில இடங்களில் திடுக்கிட வைக்கும். பரபரப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத தொடர் இது. முதல் இரண்டு சீசன்களைப் பார்க்காதவர்கள் கூடக் கேள்விபட்டு அதையும் பார்த்து இதையும் பார்த்து முடித்தார்கள். இவ்வாண்டு அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று.
புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் வெளியான இந்தத் தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாவது சீசன் இது. ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று பல இடங்களில் எட்டுப் பெண்கள் பெண்கள் காவல் நிலையத்தில் சரணடைகிறார்கள். இதைத் தேடும் பொறுப்பு காவல் துறை அதிகாரியான கதிருக்கு வந்து சேர்க்கிறது. முதல் பாகத்தில் சிறைக்குப் போன ஐஸ்வர்யா ராஜேஷை காப்பாற்றப் பாடுபடுகிறார். இந்தத் தொடர் முழுதும் குலசேகரப்பட்டினம் தசரா விழாவையும் அதை ஒட்டிச் செயல்படும் செயல்பாடுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அஷ்ட காளிகள் யார். அவர்களுக்கும் கொலை செய்யப்பட்ட வக்கீலான லாலுக்கும் என்ன சம்பந்தம்? என்பதெல்லாம் கடைசியில் விளக்கப்படுகிறது. சற்றே ஊகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும் இறுதியில் அதை முடித்த விதத்தில் தப்பித்து விட்டார்கள் இயக்குநர்கள் பிரம்மாவும் சர்ஜூனும். சாம் சி எஸ்ஸின் இசையும் பெரிய பலம்.
பெண்களாகச் சேர்ந்து தொடங்கும் ஒரு கடத்தல் தொழில் ஆண்கள் கோலோச்சும் உலகத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறது. அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அவர்கள் இந்தத் தொழிலில் இறங்குவதற்கு உண்டான காரணங்கள் என்ன? என்று பேசியிருக்கும் சீரிஸ் தான் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள டப்பா கார்ட்டல். அமைதியாக, ஆழமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ஷபானா ஆஸ்மி அனைவரையும் ஓவர்டேக் செய்து விடுகிறார். ஜோதிகாவும் கச்சிதம்.
நிமிஷா, ஷாலினி, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹான்கார் உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள். போதைப் பொருள்கள் குறித்த கதையாக இருந்தாலும் அதில் மிகவும் காட்சிப்படுத்தாமல் அணுகியிருப்பதற்கே ஒரு பாராட்டு. மேலும் தற்போதைய ஹிந்தி தொடர்களுக்கே உரிய ஆபாசக்கட்சிகளும், வன்முறையும் இல்லாமல் இருப்பது இதம். தன்பாலின ஈர்ப்பு குறித்த காட்சிகள் இருந்தாலும் அவையும் கண்ணியமாகவே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலிலிருந்து ஒரு பகுதியை எடுத்துத் திரைக்கதையாக்கி இந்தத் தொடரை எடுத்துள்ளனர். அவரும் சலிக்காமல் இதைப் பிரமோட் செய்து பேட்டிகள் கொடுத்தார். நான்கு இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அதில் ஒருவரின் கைரேகை அனைவருக்கும் பொருந்துகிறது. கொலையானவர்களில் ஒருவர் நாயகனான காவல்துறை அதிகாரிக்கு நெருக்கமானவர். யார் கொன்றது ஏன் என்பதை அறிவியல், மருத்துவம், கிரைம் என்று கலந்து சொல்கிறது இந்தத் தொடர்.
நாவலாகப் படிக்கும்போது இருக்கும் சுவாரசியம் பார்க்கும்போது இல்லை. நடித்தவர்களின் நடிப்பும் அவ்வளவு சொல்லிக் கொள்வது போல இல்லை. ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை வில்லனாகக் காட்டும்போது அவரது முக பாவம் நமக்குச் சிரிப்பை வரவழைப்பதோடு, "அய்யோ பாவம்!" என்று சொல்ல வைக்கிறது. அது தான் இதன் பலவீனம். பொழுது போக்காக ஒரு கிரைம் சீரிசைப் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்தத் தொடர் ஓகே.
முற்றிலும் புதுமுகங்களோடு விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள தொடர் இது. யாருக்கும் அடங்காத பள்ளி மாணவர்கள். மாணவர்களிடையே தகராறு செய்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு பள்ளி மாறும் நாயகன். அங்கு அவன் சந்திக்கும் ரவுடித்தனம், போதை பழக்கம் என்று அடாவடி செய்யும் மாணவர்கள். அவர்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை. பெரிய பாஸ்கட் பால் விளையாட்டு வீரனான அவன் புதிய பள்ளி மாணவர்களை இணைத்து ஓர் அணி உருவாக்குகிறான். அதில் அவன் வென்றானா? அவர்கள் வாழ்க்கை மாறியதா? என்று சொல்லும் சீரிஸ் தான் நடு சென்டர்.
சசிகுமார், கலையரசன் போன்றோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதைக்கு வருவதற்கே எட்டு எபிசொட்கள் எடுத்துக் கொண்ட இயக்குநர் அதன் பிறகு தான் நல்லவிதமாக எடுக்கத் தொடங்கி இருக்கிறார். இருந்தாலும் இப்படிப் பட்ட பள்ளிகளை எல்லாம் காட்டினால் மாணவர்கள் மேல் உள்ள மரியாதை போவதுடன் பெற்றோர்களுக்குப் பயமும் கூடிவிடும். இருந்தாலும் இளவட்டங்கள் ரசித்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே அவர் நோக்கமாக இருந்தால் அதில் ஓரளவு வென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். சரளமான கெட்ட வார்த்தைகள், சம்பந்தமே இல்லாத பள்ளிச் சுற்றுச் சூழல்கள் போன்றவை இதன் மைனஸ்.