
'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள ‘டிராகன்’ திரைப்படத்தில், 'லவ் டுடே' படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அவருடன் இணைந்து கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவும், பிரதீப் இ. ராகவ் எடிட்டிங்கும் செய்துள்ளனர். இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த மாதம் 21-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது.
கெத்தான கல்லூரி வாழ்க்கை, அங்கு அவளே உலகமென இருக்கும் காதல், பேராசிரியர்களை மதிக்காத தெனாவட்டு, அரியருடன் வெளியேறி, பெற்றோரை ஏமாற்றும் பிழைப்பு, குறுக்கு வழி முன்னேற்றத்துக்காகச் செய்யும் ஒரு ஃபிராடுதனம், அதுவே ஒருநாள், வாழ்வின் மொத்த சுகத்துக்கும் எமனாக வந்து நிற்கும் துயரம் என ஓர் இளைஞனின் வாழ்வியலை, இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
ஏற்கனவே தென்னிந்தியா முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த இந்தப் படம், 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி வசூலில் 100 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அஜித்குமாரின் விடாமுயர்ச்சியை முறியடித்தது.
வரும் மார்ச் 14-ம்தேதி 'ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்' என்ற பெயரில் இந்தி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் இந்தி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ் பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட்ட இந்தப் படம் இந்தியில் வசூலை அள்ளுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன், டிராகன் படம் இந்தியில் வெளியாவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார், "இறுதியாக ரிட்டர்ன் ஆஃப் தி டிராகனை இந்தி பேசும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ரசிகர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும் மிகப்பெரியது, மேலும் நமது தென்னிந்திய ரசிகர்களை போலவே பாலிவுட் ரசிகர்களும் இந்த படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இதுவரை படத்தை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மார்ச் 14-ம்தேதி நீங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்து அனுபவிக்கும் வரை நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியில் வெளியாகும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகனுடன்’, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து மற்றும் ஏஏ பிலிம்ஸ் ஆகியோர் இந்தித் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளனர்.
உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வரவுள்ளது, இது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி இன்னும் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படவில்லை. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதால், படத்தின் பிரீமியர் தேதியில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
’டிராகன்’ திரைப்படம் இந்தியில் சறுக்குமா? சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.