விமர்சனம்: படையாண்ட மாவீரா - உள்ளதை உள்ளபடி சொல்லியதா?
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2018 வரை வட மாவட்ட அரசியலில் பரபரப்பான பெயராக அறியப்பட்டவர் மறைந்த காடுவெட்டி குரு என்றழைக்கப்பட்ட குரு அவர்கள். இவர் மீது ஜாதி பாற்றாளர், வன்முறையாளர் என்ற கருத்தும், அதே சமயத்தில் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர், சிறந்த ஆளுமை என்ற கருத்தும் இருக்கிறது.
இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு வா.கெளதமன் அவர்கள் 'படையாண்ட மாவீரா' என்ற படம் தந்திருக்கிறார். இப்படத்தில் கௌதமன் அவர்கள் காடு வெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ' படையாண்ட மாவீரா' படம் எப்படி உள்ளது?
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்ந்து வருகிறார் குரு. இவரது தந்தை மக்களுக்காக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல் முன், பகையால் இவரது தந்தை படுகொலை செய்யப்படுகிறார். குரு வளர்ந்து பெரியவானாகி தன் தந்தையை கொலை செய்தவரின் தலையை வெட்டி பழி வாங்குகிறார். சிறை சென்று வந்த பிறகு தான் சார்ந்த சமூகம் உட்பட அனைத்து சமூகத்திற்கும் நல்லது செய்கிறார். இதனால் குருவின் சமூகம் சார்ந்த அரசியல் கட்சி, குருவிற்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்கிறது.
குரு தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். சமூக நல்லிணக்கத்திற்காக வட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நிறுவுகிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆலை விரிவாக்கத்திற்காக எளிய மக்களின் நிலங்களையும், வாழ்விடங்களையும் விலை பேசுகிறது. குரு மக்களுடன் சேர்ந்து போராடி இதை தடுகிறார்.
இவரது செல்வாக்கை குறைக்க ஒரு உயர் காவல்துறை அதிகாரியை நியமித்து குருவின் ஊருக்கு அனுப்புகிறது மாநில அரசு. காவல் துறை அதிகாரி தனது பலத்தாலும், தந்திரத்தாலும் குருவின் செல்வாக்கை குறைக்க முயற்சி செய்கிறார். முயற்சி என்ன ஆனது? குரு போராட்டத்தில் வெற்றி பெற்றாரா என்று சொல்கிறது மீதிக்கதை.
கருத்த சருமம், சிவந்த கண்களில் வா. கெளதனின் நடிப்பை பார்க்கும் போது மறைந்த விஜயகாந்த்தை நினைவு படுத்துகிறார். ஆக்ஷன் ஆக்ட்டிங் இரண்டையும் சரியான விகிதத்தில் தந்துள்ளார்.
கெளதமனுக்கு பிறகு நடிப்பில் ஸ்கோர் செய்வது போலீஸ் அதிகாரியாக வரும் பாகுபலி பரபாகர். இவர் உருவத்தையும் நடிப்பையும் பார்க்கும் போது தமிழ் நாட்டில் முன்பிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை நினைவு படுத்துகிறார்.
ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் போது உண்மை வரலாறு அதிகம் இருக்க வேண்டும் 'சினிமா பூச்சுக்கள் ' குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால் படையாண்ட மாவீரா படத்தில், வரலாற்றை விட பூச்சுக்களே அதிகம் உள்ளன. படத்தின் முதல் காட்சியிலேயே ஹீரோ கௌதமன் ஒரு போலீஸ் ஸ்டேஷனை தாக்கி ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அங்கேயே புரிந்தது, படம் உண்மையை விட்டு விலகி சராசரி சினிமாவிற்குள் நுழைந்து விட்டது என்பது. "நாம் ராஜராஜ சோழனின் வம்சம். ராஜேந்திர சோழன் எங்கள் முப்பாட்டன்" போன்ற வசனங்களை பார்க்கும் போது சமூக வலைத்தளங்களில் குடிப் பெருமை என்ற பெயரில் ஜாதி பெருமை பேசும் நபர்களின் முகம் தான் நினைவுக்கு வருகிறது.
எளிய மக்களின் நிலத்தை எடுக்க அம்மக்கள் மீது அரசு நடத்தும் கடைசி இருபது நிமிட காட்சிகள் மட்டும் ஓரளவு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. காடு வெட்டி குரு அவர்கள் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைதானார். இந்த கைது விஷயங்களை உண்மையாக, நியாயமாக எந்தவித சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருந்தால் இப்படம் ஒரு சரியான படமாக வந்திருக்கும்...
படையாண்ட மாவீரா சாதாரண மசாலா படம் போலவே கடந்து செல்கிறது.