விமர்சனம்: தண்டகாரண்யம் - வெறும் கதை அல்ல; உண்மை பதிவு!
ரேட்டிங்(3 / 5)
'காதல் என்றாலும் சரி, வீரம் என்றாலும் சரி' சினிமாவில் இந்த உணர்வுகளை இசையில் சொல்வதற்கு இளையராஜாவை தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில், தற்போது வெளிவந்துள்ள தண்டகாரண்யம் படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர், பல ஆண்டுகளுக்கு முன் ராஜாவின் இசையில் வெளிவந்த 'மனிதா, மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்ற பாடலையும், 'ஓ ப்ரியா, ப்ரியா' என்ற பாடலையும் இப்படத்தில் பயன்படுத்தி உள்ளார். பயன்படுத்திய விதம் பாராட்டும் படியாக உள்ளது.
தினேஷ், கலையரசன், ஷபீர் நடித்துள்ள தண்டகாரண்யம் (Thandakaaranyam) படத்தை அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். பா.ரஞ்சித் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டின் தேன் கனி கோட்டை பகுதி மலை கிராமத்தில் உள்ள வன அலுவலகத்தில் வேலை செய்பவர் கலையரசன். இவரது அண்ணன் தினேஷ் சமூக போராளி. அண்ணன் செய்யும் போராட்டத்தால் தம்பி பணி இழக்கிறார். பின்னர் போராடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மத்திய அரசால் நடத்தப்படும் நக்சல் ஒழிப்பு மைய்யத்தில் நடைபெறும் பயிற்சியில் சேருகிறார்.
இங்கே தேர்வானால் தண்டகாரண்யம் எனப்படும் ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரா காடுகளில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபடுத்த படுவார்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பிறகு இது போலி முகாம், இங்குள்ள அதிகாரிகள் தங்கள் சுய நலத்திற்காக அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து தன்னுடன் பயிற்சி பெரும் அனைவரையும் நக்சலைட் என்று குற்றம் சுமத்தி போலி என்கவுன்டர் செய்ய போகிறார்கள் என்று கலையரசனுக்கு தெரிய வருகிறது. இந்த என்கவுன்டர் நடந்ததா? இல்லையா என்று சொல்கிறது தண்டகாரண்யம்.
இந்த படம் எப்படி இருக்கிறது என்று சொல்வதற்கு முன்னால் கடந்த 2009 ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், அரசியல் வர்க்கமும், அதிகார வர்கமும், எளிய மக்கள் மீது நடத்திய 'மனித வேட்டையை' எந்த வித சமரசமும், இல்லாமல் தந்த டைரக்டர் அதியன் ஆதிரையை பாராட்டி விடலாம்.
தமிழ்நாட்டின் மலைப் பகுதி, ஜார்கண்ட் பயிற்சி முகாம் என இரண்டு இடங்களில் கதை நகர்கிறது. தமிழ்நாட்டில் வரும் காட்சிகளை விட ஜார்கண்ட் முகாமில் வரும் காட்சிகள் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. காட்சி உருவாக்கிய விதமே ஏதோ அசம்பாவிதம் நடப்பதை போல ஒரு உள்ளுணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
ஷபீர் - கலையரசன் மோதல், நட்பு, பயிற்சி என்ற பெயரில் மோசமாக தாக்குவது என பல காட்சிகள் மிக தத்ரூபமாக தந்திருக்கிறார் டைரக்டர்.
பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவில் தண்டக்காரண்ய காடுகளை பார்க்கும் போது விவரிக்க முடியாத பயமும் சோகமும் தெரிகிறது.
படத்தில் ஒரே நடிகரே வில்லத்தனத்தையும், சோகத்தையும் சேர்த்து தர முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார் 'டான்சிங் ரோஸ்' ஷபீர். மோதல், நட்பு, குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் என பல காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார்.
கலையரசன் நடிப்பில் அடுத்த லெவெலுக்கு சென்று விட்டார் என்று சொல்ல வேண்டும். ஊரில் காதலியுடன் காதல் செய்யும் போதும், முகாமில் கால் வலியை பொறுத்து கொண்டு பயிற்சி செய்யும் போதும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சமூகம் மேல் கோபம் கொண்ட இளைஞனாக நடிப்பில் பொருந்தி போகிறார் தினேஷ். படத்தில் பல பாசிட்டிவான அம்சங்கள் இருந்தாலும் தினேஷ் வரும் சில காட்சிகளில் ஹீரோயிசம் சற்று கூடுதலாக இருப்பது குறையே. இதை தவிர்த் திருந்தால் தண்டக்காரண்யம் இன்னொறு ஜெய் பீம் அல்லது விடுதலை படம் போல் வந்திருக்கும்.
இந்த படம் பார்த்த பின் சில கேள்விகள் நம்மிடையே எழுகிறது. தீவிரவாதிகள், நக்ஸலைட்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை என்ற செய்தியை சில ஊடகங்களில் பார்க்கிறோம். இவர்கள் உண்மையான குற்றவாளிகளா? அல்லது அப்பாவிகளா என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.
மேலும் காவல் துறையினர் நடத்தும் என்கவுன்டர் மரணத்தை 'கொலை வழக்காக' பதிவு செய்ய வேண்டும் என்று பல அமைப்புகள் குரல் தந்தும் ஏன் மத்திய - மாநில அரசுகள் செவிசாய்கவில்லை, இதன் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விகள் படம் பார்த்த பின் வருகிறது.
நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்து, எளிய மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசாக தருகிறார்கள் என்று சொல்ல தோன்றுகிறது. வரும் செப்டம்பர் 19 அன்று (நாளை) திரைக்கு வரும் தண்டகாரண்யம் கதை அல்ல. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்களின் உண்மை பதிவு.