"வீணை மீட்டும் விரல்கள் போல நெஞ்சை மீட்டி போகின்றன நினைவுகள்.
நேரம் கடந்து கொண்டே செல்கிறது. காலம் குறைந்து கொண்டே வருகிறது.
நினைவுகள் மட்டும் கூடிக்கொண்டே போகிறது. நாம் நிரந்தரம் இல்லை; ஆனால் நம் நினைவுகள் நிரந்தரம்."
டைரியில் இந்த வரிகளை எழுதி தனது பல அனுபவங்களை முகநூல் குழு ஒன்றில் பதிவு செய்துள்ளார் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தவர்களில் ஒருவரான டெல்லி கணேஷ்.
நவரசங்களையும் தனது நடிப்பில் வடித்து பார்ப்பவர்களை மெய்மறக்க செய்யும் தத்ரூப கலைஞர் அவர். நடிகர் என்ற பந்தாவுடன் மிகையாக நடிக்கும் நடிகர்கள் மத்தியில் மிக இயல்பாக நடித்து, கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள் தூத்துக்குடியின் வல்லநாட்டில் பிறந்த ‘கலைமாமணி’ டெல்லி கணேஷ் எனும் எளிமையான நடிகரான டெல்லி கணேஷின் மறைவு வருத்தம் அளித்தாலும் திரையுலகில் நிறைவுடன் பயணித்து மக்கள் மத்தியில் நல் மனிதராக, மதிக்கத்தக்க கலைஞராக வாழ்ந்த அவரின் நிரந்தரமான நினைவுகளில்...
நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் திரைத்துறைக்கு வருவதற்கு முன் இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றி உள்ளார்.
ஆனால் நடிப்பின் மீதிருந்த காதலால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த பணியில் இருந்து விலகினார். டெல்லி மேடை நாடகங்களில் அதிக ஆர்வத்தை காட்டி வந்த நிலையில் பட்டின பிரவேசம் (1977) திரைப்படத்தில் கே.பாலசந்தரால் அறிமுகமாகி பாராட்டுகளுடன் முத்திரை பதித்தார்.
அதன் தொடர்ச்சியாக அப்போதைய டாப் ஹீரோக்களின் படங்களில் அவர் ஏற்ற பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்தன்மையுடன் ரசிகர்களிடையே பாராட்டுகளை அள்ளியது. அவற்றில் பாலசந்தர் இயக்கிய சிந்துபைரவியின் குருமூர்த்தி பாத்திரம் இதுவரை பேசப்படுவது ஒரு சான்று.
பட்டினப்பிரவேசத்தில் துவங்கிய அவரின் திரைப்பணி கமலின் இந்தியன் 2 வரை தொய்வின்றி பலரையும் மகிழ்வித்தது.
டெல்லி கணேஷ் நடிகர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட என்பது தெரியுமா?
'பிள்ளையார் சுழி' மற்றும் 'டெல்லி தர்பார்' ஆகியவை அவர் எழுதி வெளியிட்ட இரண்டு நூல்கள். அவர் இது பற்றி முகநூல் குழு ( நன்றி மத்யமர் ) ஒன்றில் பதிவு செய்திருந்த தகவல் இங்கு ...
"என் வாழ்க்கையில் நடக்காத ஒன்னு நடந்ததுன்னா அது புத்தகம் எழுதுவது தான். எனக்குத் தொழில் நடிப்பு. ஏதோ சிறு சிறு கதைகள் படிப்பேன். நாவல் எதுவும் படித்ததில்லை. நா.பா. அவர்கள் எழுதிய குறிஞ்சி மலர் படித்திருக்கிறேன்.
அப்படியானால் புத்தகம் எழுதும் ஐடியா எப்படி வந்தது?
ஞானபிரகாசம் என்பவர் வானொலி நிலையத்தில் இயக்குனராக இருந்தார். என்னை ஒரு முறை பேட்டி எடுக்க வானொலி நிலையத்திற்கு அழைத்தார். வீடு மனைவி மக்கள் கிடைத்து விட்டால் மட்டும் ஒருவன் முழு மனிதனாக முடியாது. வாழ்க்கையில் ஒரு புத்தகமாவது அவன் எழுதி இருக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அப்பொழுதுதான் எனக்கு ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் நான் எழுதிய முதல் புத்தகம் பிள்ளையார் சுழி. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. என்னை வாழ்த்தி பாராட்டிய பலரும் இதோடு விட்டுவிட வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் என்றார்கள்.
எனது சிறு வயதிலிருந்து திரைப்படத்தில் நுழையும் வரை 'பிள்ளையார் சுழி' புத்தகத்தில் எழுதியிருந்தேன். பிறகு என்னுடைய 40 வருடதிரை உலக அனுபவங்களை குமுதத்தில் எழுத ஆரம்பித்தேன்.
குமுதத்தில் வந்து மூன்று வருடம் கழித்து புத்தகமாக வெளிவந்தது. அந்த புத்தகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னுடைய ஹாங்காங் நண்பர் ராம் அவர்களிடம் கேட்டேன். சற்றும் யோசிக்காமல் 'டெல்லி தர்பார்' என்று வையுங்கள் என்றார். இந்தத் தலைப்பு எல்லோருக்கும் பிடித்து விட்டது. பல திரையுலக பிரபலங்கள் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள். என்னைப் பற்றி வெகுவாக பாராட்டினார்கள். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எல்லோரும் எழுந்து இருந்து அவருக்கு கை தட்டுங்கள் என்று சொன்னார். அரங்கமே குலுங்கியது. எனக்கோ ஆனந்த கண்ணீர். ஆகா படத்தில் நான் நடித்த ஒரு காமெடி காட்சியை மேடையில் செய்துகாட்டினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்ததை நான் பார்த்து பெருமை பட்டேன்." ( நன்றி மத்யமர் )
பாகுபாடு இன்றி பழகுவதில் தேர்ந்தவரான டெல்லி கணேஷ், பல நல்ல கருத்துகளை தனது மேடைப்பேச்சுகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
"நல்ல கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை திரைப்படங்களாக உருவாக்கலாம், திரைத்துறையில் மாற்றம் தேவை. அதைக் கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்று திரைப்படம் குறித்த அவரின் கருத்தும் அதில் ஒன்று.
ஒரு நீண்ட நெடிய வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கலைஞன் இன்று தனது பூலோக பயணத்தை முடித்துவிட்டாலும் சினிமா அவர் கடந்து வந்த பாதையையும் சாதனைகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்றென்றும்.
தொகுப்பு: சேலம் சுபா