
ரேடியோ மிர்ச்சி கோயம்புத்தூரில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி பின்னாளில் பிக் எப்.எம் 92.7-ல் ஒலிபரப்பான ‘டேக் இட் ஈசி’ மற்றும் ‘கிராஸ் டாக்’போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து டிவியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் சென்ற இவரது பயணம், ‘எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் திரைவுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘தீய வேலை செய்யணும் குமாரு’ திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகரானார். அதனை தொடர்ந்து இது என்ன மாயம், யட்சன், நானும் ரவுடி தான், ஜில் ஜங் ஜக், தேவி, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவர் 2019-ல் LKG படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் இவருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனை தொடர்ந்து இவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.
ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், பேச்சாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமையோடு வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இயக்குனரான ஆர்.ஜே.பாலாஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யாவின் 45வது படத்துக்கு 'கருப்பு' என்று தலைப்பிட்டு அந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி 'கருப்பு' படத்தின் டைட்டில் போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் "RJB" என போடப்பட்டிருந்து. இதை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தனது பெயரை "RJB" என மாற்றிக் கொண்டதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜியிடம் ‘பல பிரபலங்களின் பெயர் 3 எழுத்தில் தான் இருக்கிறது. 3 எழுத்தில் பெயர் கொண்ட பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே நீயும் உனது பெயரை 'RJB' என மாற்றிக் கொண்டால் ‘நல்லா வருவ” என கூறியுள்ளார். இதனாலேயே தனது பெயரை "RJB" என்று மாற்றிக்கொண்டதாக ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சுவாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, நட்டி நட்ராஜ், அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்துக்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.