ஆர்.ஜே.பாலாஜி கதையை ரசித்துக் கேட்ட விஜய்!

ஆர்.ஜே.பாலாஜி கதையை ரசித்துக் கேட்ட விஜய்!
Published on

ரன் பேபி ரன் பட வாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜிக்கு எப்படி வந்ததாம்? அவரே இதைப் பற்றிச் சொல்கிறார்.

“நான் 'எல்.கே.ஜி' ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படிப் போகலாம் என்றுதான் தோன்றியது. யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால்தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் 'ரன் பேபி ரன்' பட வாய்ப்பு வந்தது.

ஆர்.ஜே.பாலாஜியா, இவர் எப்போதும் நகைச்சுவைப் படம் தானே எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான் வரவேண்டும். இந்தக் கதையைக் கேட்கும்போது அதுதான் தோன்றியது. இந்தக் கதை கேட்டுப் பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ அதை அப்படியேதான் எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை. பாட்டுப் பாடி நடனமாடினால் தான் கதாநாயகி என்று அர்த்தம் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சினிமாத்தனமான சண்டைக் காட்சிகள் இருக்காது. சராசரி மனிதனிடம் ஒருவனின் பணப்பையை பறித்துக் கொண்டு ஓடினால், அந்த சராசரி மனிதன் என்ன செய்வானோ அப்படித்தான் சண்டைக் காட்சிகள் இருக்கும்.

சாமி படத்தில் விக்ரமை போலீஸாக ஏற்றுக் கொண்டதுபோல் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கு முதலில் கண்ணாடி அணியாமல் பழக வேண்டும் என்றுதான் வீட்ல விஷேசங்க படத்தில் நடித்தேன். உடலை ஏற்றிக் கொண்டுதான் போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுள்ளேன். அதற்கு சிறிது காலம் ஆகும். அதற்குள் நல்ல கதை வந்தால் எனது நண்பர் அருள்நிதி அல்லது ஜெயம் ரவியைப் பரிந்துரை செய்வேன்.

'ரன் பேபி ரன்' படத்தில் கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும்.

செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடக்கும் விதமாக இருக்கும். இந்தப் படத்தின் கதையையும் கூற முடியாது. ஆனால், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. என்னுடைய ஆர்.ஜே. பணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்கு வந்தது ஆசீர்வாதத்தினால்தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில்தான் அறிமுகமானேன். அதற்குப் பிறகு என்னுடைய இந்த வளர்ச்சியை ஆசீர்வாதமாகத்தான் கருதுகிறேன். ஆர்.ஜே.வாக இருக்கும் போது பலரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு யாரும் போட்டி கிடையாது.

மக்களாக கொடுக்காமல், எனக்கு நானே ஸ்டார் பட்டம் போட்டுக் கொள்வது பிடிக்காது.

கடந்த வருடம் ஜனவரி 27ஆம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாகச் சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விடலாமா என்று கேட்டார். வீட்ல விஷேசங்க படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார். இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்குக் கூறிய கதை அவருக்கு மட்டும்தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன்.

இந்த வருடத்தில் எனது நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். ரன் பேபி ரன் படத்திற்கு பிறகு 'சிங்கப்பூர் சலூன்', இன்னொரு படம் இனிமேல் தான் படபிடிப்பு ஆரம்பமாகும். இரட்டை வேடத்தில் நடிப்பதற்குச் சில காலம் ஆகும். அசாதாரணமான நடிகரால் தான் ஒரே படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். 'மைக்கேல் மதன காம ராஜன்' மாதிரி எனக்கும் நடிக்க ஆசை இருக்கிறது.

முதலில் ஒற்றைக் கதாபாத்திரத்தில் உறுதியான ஹீரோவாக ஆன பிறகுதான் அதைப் பற்றிச் சிந்திக்க முடியும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com