யாரையும் காசு கொடுத்து தியேட்டரில் சாமியாட வைக்கவில்லை!– ஆர்.ஜே.பாலாஜி..!

RJ Balaji Press meet
RJ Balaji karuppu film
Updated on

மே 15 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆர். ஜே.பாலாஜியும் சூர்யாவும் முதன்முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாகவும் ஆர். ஜே.பாலாஜி நடித்திருந்தார். திரிஷா , ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பின் ஆறு திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவும் திரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர்.

207 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கருப்பு திரைப்படம் கடந்துள்ளதாக ஆர் ஜே பாலாஜி தனது X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக திரைப்படம் பயணித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் நிகர வசூலை தாண்டிய நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம் பிடித்துள்ளார்.

மேலும் கருப்பு திரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்காக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறார். நேற்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கிற்கு சென்று , படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆர். ஜே.பாலாஜி உற்சாகப்படுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். "எனக்கு தெய்வ பக்தி அதிகம், திரையரங்குகளை பார்க்கையில் மக்களுக்கும் தெய்வ பக்தி அதிகமாக இருக்கிறது என்பது தெரிகிறது. நான் இதுவரை இரண்டு சாமிப் படங்களை எடுத்து உள்ளேன். நல்ல திரைப்படம் செய்தால் அது மக்கள் மனதிற்குள் நிற்கும் என்று நினைக்கிறேன். என்னிடம் மற்ற கதைகளும் நிறைய இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு ஒரு சாமி படம் எடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.

கருப்பசாமி நம்மூரின் எல்லைச்சாமி அவருக்கு சாதி மதம் எல்லாம் கிடையாது. எந்த ஊராக இருந்தாலும் ஊருக்கு வரும்போது, ஊரை விட்டு வெளியே செல்லும் பொழுது கருப்பசாமியை வணங்கிவிட்டு தான் செல்வது தான் வழக்கம். மக்கள் அனைவரும் கருப்பசாமியை தங்களின் சாமியாக நினைத்து இந்த திரைப்படத்தை கொண்டாடுவது , எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது". இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தினை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கின்றனர். "ஆன்லைனில் இருந்து விமர்சனம் செய்பவர்களுக்காக இந்த திரைப்படத்தை நான் எடுக்கவில்லை. இந்த திரைப்படம் மக்களுக்காக எடுக்கப்பட்டது இது அவர்களுக்கு பிடிக்கும் இந்த படத்தினை கொண்டாடுவார்கள் என நம்பிக்கை எனக்கு இருந்தது இதை நான் படத்தின் ரிலீசுக்கு முன்பே கூறியிருந்தேன். இன்று தியேட்டர்களிலும் அதுவே நடைபெறுகிறது.

தியேட்டரை பார்ப்பதற்கு திருவிழா போல இருக்கிறது ஒரு மாயாஜாலம் போல இருக்கிறது. ஒரு சில பேர் பணத்தின் தயாரிப்பு நிறுவனமே ஆள் செட் செய்து தியேட்டரில் சாமி ஆட அனுப்பி உள்ளார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். எங்களால் இவ்வளவு பட்ஜெட் செலவு செய்து ஆள் அனுப்ப முடியாது அது படத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கி இருக்கும். மக்கள் அவர்களின் சொந்த பணமாக நினைத்து இந்த படத்தை கொண்டாடுவது தான்" ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கிறது என்று ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com