விமர்சனம்: ரோமியோ! விஜய் ஆன்டனியின் பாசிட்டிவ் மோட்!
ரேட்டிங்(3 / 5)
‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது’ என்று சூரியவம்சம் படத்தில் தனது மனைவியை கலெக்டர் ஆக்கி பார்த்த நாயகன், இங்கிலீஷ்காரன் படத்தில் தனது மனைவியை விளையாட்டு வீராங்கனையாக உருவாக்க முயன்ற நாயகன் போல, இன்னும் தமிழ் சினிமாவில் தனது மனைவியின் கனவுகளை நிறைவேற்ற போராடிய படங்களைப் போலவே தனது மனைவியின் ஒரே கனவை நிறைவேற்ற போராடும் ஒரு கணவனின் கதைதான் ரோமியோ.
மற்ற படங்களில் கலெக்டர் ஆகணும், டீச்சர் ஆகணும் என மனைவிகள் கனவு காணுவார்கள். இந்தப் படத்தில், தமிழ் நாட்டில் இன்னும் பல பெண்கள் வரத் தயங்கும் சினிமா துறையில் கதாநாயகி ஆக வேண்டும் என விரும்புகிறார் மனைவி. கல்யாணமான ஓரிரு நாட்களில் மனைவி விவாகரத்து கோரும் 'மௌன ராகத்தின்' சாயலும் இப்படத்தில் உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். மீரா விஜய் ஆன்டனி இப்படத்தை தயாரித்துள்ளார்.
மலேசியாவில் பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் ஆன்டனி தனது சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். அங்கே ஒரு மரண வீட்டில் மிருணாளினி ரவியை சந்தித்து, ஒன் சைடாக காதல் வயப்படுகிறார். மிருணாளினியின் பெற்றோரை சந்தித்துப் பேசி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணமான மறுநாளே மிருணாளினி, ‘எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. சினிமாவில் ஹீரோயின் ஆவதுதான் எனது லட்சியம்’ என்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியை ஹீரோயினாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்கிறார் விஜய் ஆன்டனி. அதோடு, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படம் என்ன ஆனது என்பதுதான் ரோமியோவின் மீதிக் கதை.
இதுபோன்ற பல படங்கள் பார்த்து பழகி அலுத்தும் போனதால் இந்தக் கதை எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. கதாநாயகி ஆகும் கனவு நம்ம கதாநாயகிக்கு இருக்கு எனத் தெரிய வரும்போதே, கணவர்தான் தயாரிப்பாளராக மாறப்போகிறார் என்று நம் சிற்றறிவுக்கு எட்டும் அளவில்தான் காட்சிகள் உள்ளன.
இருப்பினும் படத்தின் இரண்டாவது பாதி வேகமாக நகர்வதாலும், பல எமோஷனல் காட்சிகளாலும் நம்மை ரசிக்க வைத்து விடுகிறது இந்தப் படம். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சி மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
பிச்சைக்காரன், எமன், சைத்தான், கொலை என நெகடிவ் தலைப்பில் நடித்து வந்த விஜய் ஆன்டனி நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பாசிட்டிவ் தலைப்பில் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கும் படத்தில் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டும் தந்துள்ளார் மிருணாளினி ரவி. இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் இதுதான் இவருக்கு நடிப்பில் பெயர் வாங்கித் தரும் படமாக வந்துள்ளது.
கதை தன்னைச் சுற்றி நகர்கிறது என்பதை உணர்ந்து நல்ல நடிப்பை தந்துள்ளார். தனது கனவுகள் திருமணத்தால் சிதைக்கப்படும்போதும், கணவனை பார்வையால் வெறுக்கும்போதும் வேற லெவலில் நடித்துள்ளார். சாரா மற்றும் குழுவினர் செய்யும் நகைச்சுவையும் ரசிக்கும்படி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு அனைவரும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் படத்தை விஜய் ஆன்டனி தந்துள்ளார். இந்த சம்மருக்கு ஒரு முழு நீள ஜில்லென்ற கமர்ஷியல் என்டர்டைனராக வந்துள்ளது ரோமியோ.