

ஜெகன் ராயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ரூம் பாய். நாம் வெளியூர் செல்ல நேரும் போது அங்கே உள்ள ஹோட்டல்களில் தங்குவோம். நாம் தங்கும் அறைகளில் ஏதாவது ரகசிய மைக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என சோதனை செய்து பார்த்திருப்போமா? நம்மில் பலர் இதை செய்திருக்க மாட்டோம். இது போன்ற ரகசிய கேமரா தங்கும் அறைகளில் இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லும் படமாக வந்துள்ளது. ரூம் பாய்.
கூர் நோக்கு இல்லத்தில் இருந்து விடுதலை ஆகி வருகிறான் சஞ்சய். ஏலகிரி மலையில் உள்ள குயின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்க்கிறான். அந்த ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா இருக்கிறது. இந்த விஷயம் சஞ்சய் உட்பட வேலை செய்யும் பலருக்கு தெரியவில்லை. இதற்க்கிடையில் சஞ்சய் இருந்த சிறுவர் கூர் நோக்கு இல்லத்தின் வார்டன் கொலை செய்யப்படுகிறார். மற்றொரு நாள் ஹோட்டலின் மேனேஜர் முகமூடி அணிந்த ஒருவரால் கொலை செய்யப்படுகிறது. இந்த இரண்டு கொலைகளிலும் சஞ்சய் பெயர் அடிபடுகிறது. உண்மையில் இந்த கொலைகளுக்கும் ரூம் பாய் சஞ்சய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்று சொல்கிறது கிளைமாக்ஸ்.
படத்தின் முதல் பாதி பெரிய ட்விஸ்ட்களோ, திருப்பங்களோ இல்லை. ஆனால் இரண்டாம் பாதி கதை வேகமாக நகர்கிறது. பல முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் தான் வருகிறார்கள். படம் பார்த்து முடிக்கும் போது ஒரு அவரேஜான ஆக்ஷன் திரில்லர் படம் பார்த்த உணர்வு வருகிறது.
ஒளிப்பதிவு, பட தொகுப்பு இரண்டில் படத்தொகுப்பு தான் பெஸ்ட். சஞ்சயாக நடிக்கும் ஹீரோ நிகில் ஆக்ட்டிங்கை விட, ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். தம்பிக்கு மற்ற காட்சிகளை விட ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பு நன்றாக வருகிறது. ஹீரோயின் ஹர்ஷா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார். வாடனாக நடிப்பவரும் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
படத்தின் முதல் பாதியும் நன்றாக இருந்திருந்தால் இந்த படம் முழுமையாக ஒரு சிறந்த படமாக வந்திருக்கிறது என்று சொல்ல முடியும். பாதிக்கு பாதி தான் நன்றாக உள்ளது என்று சொல்ல வேண்டியுள்ளது இருந்தாலும் இப்படம் பார்த்த பின்பு, அடுத்த முறை வெளியூர் ஹோட்டலில் தங்க நேர்ந்தால் அறையில் ரகசிய மைக்ரோ கேமரா இருக்கிறதா என சோதனை செய்யும் எண்ணம் உங்களுக்கு வரலாம்.
ரூம் பாய் - கொஞ்சம் கதை, கொஞ்சம் விழிப்புணர்வு!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here