

Mr. X படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய இப்படத்தின் டைரக்டர் மனு ஆனந்த் "எங்கள் படத்தை துரந்தர் படத்துடன் கம்பேர் செய்யாதீர்கள். இது வேறு வகை ஸ்பை படம்" என்று சொன்னார். இந்த படம் உண்மையில் வித்தியாசமான ஸ்பை த்ரில்லர் படமாக வந்துள்ளதா என்று பார்க்கலாம்.
சரத் குமார், ஆர்யா, கெளதம் கார்த்தி, மஞ்சு வாரியர் இந்த படத்தில் நடித்துளார்கள்.
1964 ஆம் ஆண்டு நியூக்ளியர் பாம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கொண்ட ஒரு பெட்டியை அமெரிக்கா இந்தியாவின் இமயமலை பகுதியில் விட்டு சென்று விடுகிறது. இந்த பெட்டியை இந்திய உளவுத்துறை அமைப்பான ரா-வில் இருக்கும் சரத்குமார் பாதுகாத்து வருகிறார்.
ரஷ்யா ராணுவம் இந்த பெட்டியை கைப்பற்றி சரத்குமரை சிறைபிடித்து மாஸ்கோவிற்கு அழைத்து செல்கிறது. சரத்குமாரை மீட்டு, பெட்டியை கைப்பற்ற ரா அமைப்பின் உயர் அதிகாரியாக இருக்கும் மஞ்சு வாரியார் ஆர்யா, கெளதம் கார்த்தி இருவரையும் அனுப்புகிறார்.
இதற்கிடையில் சென்னை மஹாபலிபுரத்தில் நடைபெறும் G20 மாநாட்டில் அணு ஆயுத தாக்குதல் நடக்க இருப்பதாக தகவல் வருகிறது. இந்த பிரச்சனைகள் எப்படி முறியடிக்கபட்டது என்று சொல்கிறது கதை.
பரபரப்பான காட்சிகள், மாறுபட்ட லொகேஷன், ஆர்யா - அனேகா காதல் என முதல் பாதி படம் நன்றாகவே வந்துள்ளது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை திணறுகிறது. பல படங்களில் பார்த்த ஸ்பை திரில்லர் காட்சிகள் அப்படியே ரிபீட் மோடில் இருக்கிறது.
ஆர்யா - அதுல்யா ரவி அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் எம்.ஜி.ஆர். காலத்து பழசு. பல சம்பவங்களை ஒரே படத்தில் சொல்ல டைரக்டர் முயற்சி செய்துள்ளார். இதனால் பல கதைகள் இருப்பது போல் உணர்வு வருகிறது.
இந்த படத்தின் பாசிட்டிவ் மற்றும் பலமான விஷயம் தொழில்நுட்பம்தான். சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்ஷன் இரண்டும் ஹாலிவுட் படத்தை நினைவு படுத்துகிறது. தர்புகா பின்னணி இசை ஓரளவு நன்றாக உள்ளது.
ஆர்யா, கெளதம் கார்த்தி இருவரும் தன் முழு உழைப்பை தந்து நடித்துள்ளார்கள். மஞ்சு வாரியர் ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக சண்டை போடுகிறது. சரத்குமார் ஒரு காட்சியில் நாட்டாமை கெட் அப்பில் வரும் போது அரங்கமே கை தட்டுகிறது.
இப்படி பல பாசிட்டிவ் விஷயங்கள் இந்த படத்தில் இருந்தாலும் ஸ்டராங்கான திரைக்கதையும், பல கதைகளை ஒரே படத்தில் பார்ப்பது போன்ற உணர்வும் வருவதால் Mr. X படத்தை முழுமையான ஸ்பை த்ரில்லர் படம் என சொல்ல முடியவில்லை.
Mr. X - டெக்னாலஜியில் புலி போல் இருக்கிறது. திரைக்கதையில் எலியாக மாறி விடுகிறது.