

மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இவரது பெயர் அடிபடுவது அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்னிந்தியாவில் உள்ள ஆன்மித் தலங்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் முக்கியமானது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைகளும் அதிக அளவில் வந்து குவியும்.
இந்நிலையில் மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா கடந்த 1998-ம் ஆண்டில் சபரிமலை கோவிலுக்கு 30 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். அவை ஐயப்பன் கோவில் கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அந்த தங்கத்தில் கவசங்கள் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தன. அதேபோல் பக்தர்கள் தங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறிய பின்னர் சிறுக சிறுக காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் தங்கத்தை வைத்து, கோவிலின் கற்பகிரகம் தொடங்கி பல சன்னதிகளில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் அகற்றப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அந்தத் தகடுகளை சிலைகளில் பொருத்திய போது, சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கம் மாயமானதாகவும், திருடப்பட்டதாகவும் புகாரும் குற்றச்சாட்டும் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஏற்கனவே பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ். வாசு உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் நடிகர் ஜெயராம் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம், ‘ 2019-ம் ஆண்டு நடந்த பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் நான் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.