சைஃப் அலிகான் தன்னை வேகமாக அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை அழைத்து நன்றித் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர் சைஃப் அலிகான். இந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரான இவர், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
கடந்த 16ம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டில் புகுந்த திருடன் ஒரு பெண் பணியாளரை மிரட்டினான். அப்போது அந்த பெண் கத்தியதால், சைஃப் அலிகான் ரூம் விட்டு வெளியே வந்து அந்த பெண்ணை காப்பாற்ற போகும்போது, திருடன் அவரை 6 முறை கத்தியால் குத்தினான். படுகாயமடைந்த அவரை வீட்டு பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, உடனே அகற்றப்பட்டது. இதனையடுத்து 5 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து நேற்று காலை சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இப்போது சைஃப் அலிகான் குணமடைந்துவிட்டதால், அவர் ஆட்டோ டிரைவர் பஜன் சிங்கை சந்தித்தார். இதனால் டிரைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று தனது உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். சரியான நேரத்தில் சைஃப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்திருந்தால், நிலைமை மோசமாக மாறியிருக்கும்.
இதனால், மற்றவர்களுக்கும் இது போன்று உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதேபோல் அந்த ஆட்டோ ட்ரைவருக்கு 50 ஆயிரம் ரூபாயை பரிசுத் தொகையாக வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது,.
இதுகுறித்து ஆட்டோ ட்ரைவர் பேசியதைப் பார்ப்போம். “சைஃப் அலிகானை சந்திக்க எனக்கு 3.30 மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால், நான் ஐந்து நிமிடம் தாமதமாக சென்றேன். அப்போதும் மரியாதை கிடைத்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், இது எந்த விதமான சிறப்பும் இல்லை. ஒரு சாதாரண சந்திப்பே. நான் அவரிடம், “சீக்கிரம் குணமடையுங்கள், நான் உங்களுக்காக அப்போது பிரார்த்தனை செய்தேன். நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன் என கூறினேன்.” என்று பேசினார்.