அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள படம் சக்தி திருமகன். தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றவர்களுக்கு தேவைப்படும் டிரான்ஸ்பர், இலாகா மாற்றம் போன்ற விஷயங்களை செய்து மீடியேட்டர் வேலை செய்து சம்பாதிக்கிறார் கிட்டு ( விஜய் ஆண்டனி). ஒரு மத்திய மந்திரியிடம் உதவியாளராக இருக்கும் ஒருவருக்கு உதவி செய்ய போக அது வேறொரு பிரச்சனையாக மாறுகிறது.
அரசியலில் கிங் மேக்கராக இருக்கும் அபயங்கர் ஸ்ரீனிவாசன் (காதல் ஓவியம் கண்ணன்) கிட்டு மீது சந்தேகம் கொண்டு கைது செய்கிறார். கிட்டு சுமார் 5000 கோடி வரை பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக சொல்லி கைது செய்து டார்ச்சர் செய்கிறார்.
இந்த கொள்ளை எதனால்? யார் இந்த கிட்டு? என்று விரிகிறது கதை. படம் தொடங்கியது முதல் பரபரப்பாக செல்கிறது. இடைவேளைக்கு பின்பு, முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஜென்டில்மேன், அதன் பிறகு வெளியான சிவாஜி தி பாஸ் போன்ற பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு தரும் ராபின் ஹூட் பாணி படத்தை போன்று நகர்கிறது.
இடைவேளை முடிந்த அடுத்த காட்சியிலேயே படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பதை சொல்லி விடும் அளவில் திரைக்கதை உள்ளது. ஜெண்டில் மேன் படத்தில் அட்வைஸ் செய்ய நம்பியார் என்றால், இங்கே வாகை சந்திர சேகர் இருக்கிறார்.
முதல் பாதியின் திரைக்கதை நகர்வில் பாதி அளவு கூட இரண்டாம் பாதியில் இல்லாதது ஒரு குறையே. படத்தின் இறுதி காட்சிகள் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை ஒத்து போகிறது. படத்தில் மிக பிரமாதமாக நடித்திருப்பது அபயங்கராக வரும் காதல் ஓவியம் கண்ணன்தான்.
நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சரியான கேரக்டரில் கம் பேக் தந்துள்ளார். இவரது நடிப்பு கிங் மேக்கர் என நம் நாட்டில் பேசப்படும் ஒருவரை நினைவுப்படுத்துகிறது.
நான், சலீம் இப்படி பல படங்களில் எப்படி விஜய் ஆண்டனி நடித்தாரோ அப்படியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். உள்ளேன் ஐயா என்பதை போல் ஹீரோயின் திருப்தி வந்து போகிறார். விஜய் ஆண்டனி தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
நடிப்பை ஒரே மாதிரி வழங்கினாலும் இசையில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஷெல்லியின் ஒளிப்பதிவில் சண்டை காட்சிகள் சிறப்பாக உள்ளது. படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் பரவாயில்லை, பூகோளத்தை மாற்றி சொல்கிறார்கள். மயிலாடுதுறை பகுதியில் உள்ள மலை கிராமம் என்கிறார்கள். மயிலாடுதுறையில் ஏது மலை? என்ற கேள்வி வருகிறது. இரண்டாம் பாதியை சரியாக தந்திருந்தால் சக்தி திருமகன் சிறந்த படமாக வந்திருக்கும். தற்போது ஒரு படத்தில் பல பழைய படங்கள் பார்த்த உணர்வுதான் வருகிறது.