
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை உலகளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கான நடிகர் சல்மான் கான் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
பாலிவுட்டின் அன்பான பைஜான் நடிகர் சல்மான் கான், இவர் வெறும் பாக்ஸ் ஆபிஸ் ஜாம்பவான் மட்டுமல்ல, ஃபேஷன் முன்னோடியும் கூட. சல்மான் தனது ஆடைத் தேர்வுகள், வசதி, ஆடம்பரம் மற்றும் ஆழ்ந்த கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்!’ என்ற தலைப்பில் தனது கையில் பிரத்யேகமாக அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சல்மான் கான் ஜேக்கப் & கோவின் (Jacob & Co) ரூ.61 லட்சம் மதிப்புள்ள ராம் மந்திர் கடிகாரத்தை அணிந்திருந்தார். முன்னதாக அபிஷேக் பச்சனிடமும் இந்த கைக்கடிகாரம் உள்ளது.
மேலும் இது 'எபிக் எக்ஸ் ராம் ஜன்மபூமி டைட்டானியம் பதிப்பு 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்கப் & கோ கடிகாரம் ஆடம்பரம் மற்றும் பாரம்பரியத்தின் சரியான கலவையாகும். ராம ஜென்மபூமியின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
சல்மான் கான் ஆடம்பரமான கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் அற்புதமான ரசனைக்கு பெயர் பெற்றவர். இந்த அற்புதமான கைக்கடிகாரம் இந்தியாவின் வளமான ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் செழுமையான வேலைப்பாட்டை இணைக்கும் ஒரு கலைப் படைப்பாகும். எதோஸ் வாட்ச்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த லிமிடெட் எடிசன் கைக்கடிகாரம், ராமர் ஜன்மபூமி கோவிலின் கட்டடக்கலை சிறப்பை அழகாகக் காட்டுகிறது.
நடிகர் சல்மான் கான் அணிந்திருந்த இந்த ஆடம்பர கைக்கடிகாரத்தின் விலை ரூ.61 லட்சம் என்று கூறப்படுகிறது. நடிகர் சல்மான்கான் தனது தாயார் தனக்கு அந்தக் கடிகாரத்தை பரிசாக அளித்ததாகத் தெரிவித்துள்ளார். லிமிடெட் எடிசனான இந்த கைக்கடிகாரம் உலகளவில் 49 மட்டுமே உள்ளது. அதில் தற்போது ஒன்று நடிகர் சல்மான் கானிடம் உள்ளது. அபிஷேக் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் ரூ.34 லட்சம் மதிப்புள்ள டைட்டானியம் பதிப்பில் உள்ளது; ஆனால் சல்மான் கான் அணிந்திருக்கும் கடிகாரம் ரூ.61 லட்சம் மதிப்புள்ள ரோஸ் கோல்ட் பதிப்பில் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இதை ராமஜென்ம பூமி கைக்கடிகாரம் என்று அழைக்கின்றனர். அயோத்தி ராமர், லட்சுமணன், அனுமார் ஆகியோருடன் ராம மந்திரங்களை இணைத்து இதை உருவாக்கி உள்ளனர்.
சல்மான்கான் அணிந்துள்ள கைக்கடிகாரத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.