ஸ்மார்ட் வாட்ச், உடல்நலம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை ஒருங்கே பெற்றுள்ளதால் இன்றைய நவீன உலகில் அவசியமான சாதனமாக மாறிவிட்டது . மார்க்கெட்டில் ஏராளமான ஸ்மார்ட் வாட்சுகள் இருப்பதால் ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் போது கவனிக்க வேண்டிய 9 அம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. உங்கள் தேவையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்:
ஸ்மார்ட்வாட்ச் வாங்குவதற்கு முன், உடற்பயிற்சி கண்காணிப்பு, இதய துடிப்பு அளவீடு, தூக்க கண்காணிப்பு போன்ற உடல்நல அம்சங்கள் அல்லது அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் போன்ற தகவல் தொடர்பு வசதிகள் வேண்டுமா என்பதனை தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப ஸ்மார்ட் வாட்சை வாங்குங்கள் .
2. இயங்குதளம் மற்றும் இணக்கத்தன்மை:
ஸ்மார்ட்வாட்ச் எந்த இயங்குதளத்தில் (Operating System) இயங்குகிறது என்பதை கவனிப்பதோடு, ஸ்மார்ட்போனுடன் இணக்கமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆப்பிள் வாட்ச் ஐபோனுடனும், வேர் ஓஎஸ் (Wear OS) வாட்ச்கள் ஆண்ட்ராய்டு போன்களுடனும் சிறப்பாக செயல்படும்.
3. வடிவமைப்பு மற்றும் வசதி:
திரையின் அளவு, வடிவம், பிரகாசம் போன்ற அம்சங்களோடு , மணிக்கட்டில் வசதியாக பொருந்தும் அளவிலான ஸ்மார்ட்வாட்சை தேர்ந்தெடுத்தால்தான் அணிய வசதியாக இருக்கும்.
4. பேட்டரி ஆயுள்:
ஸ்மார்ட்வாட்ச்சின் பேட்டரி ஆயுள் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை கவனியுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்வாட்சை தேர்ந்தெடுப்பது நல்லது.
5. அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள்:
ஜிபிஎஸ், இதய துடிப்பு மானிட்டர், ஆக்சிஜன் சென்சார், தூக்க கண்காணிப்பு, உடற்பயிற்சி முறைகள் போன்ற அம்சங்களோடு, அழைப்புகள், குறுஞ்செய்திகள், இசைக் கட்டுப்பாடு போன்ற தகவல் தொடர்பு வசதிகள் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும் .
6. விலை மற்றும் பிராண்ட்:
பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை அதிகம் என்றாலும் தரமான அம்சங்களை கொண்டிருக்கும். மேலும் வாடிக்கையாளர் மதிப்புரைகள், நிபுணர் விமர்சனங்களை படித்து வாங்குவதோடு ஸ்மார்ட்வாட்ச்சின் விலை பட்ஜெட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. நீர் மற்றும் தூசி எதிர்ப்பு:
நீச்சல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது நீர் எதிர்ப்பு திறன் உள்ள ஸ்மார்ட் வாட்சுகளே பயனளிக்கும் என்பதால் அந்த திறன் இருக்கிறதா என்பதை தெரிந்து வாங்குங்கள்.
8. கூடுதல் அம்சங்கள்:
சில ஸ்மார்ட்வாட்ச்களில் கூடுதல் அம்சங்களாக என்எஃப்சி (NFC) மூலம் பணம் செலுத்தும் வசதி, குரல் கட்டளைகள், கேமரா கட்டுப்பாடு போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும்.
9. உத்தரவாதம் மற்றும் சேவை:
ஸ்மார்ட்வாட்ச்சில் பழுது ஏற்பட்டால் சரி செய்யக்கூடிய வகையில் சேவை மையங்கள் குறித்தும் உத்தரவாத காலம் குறித்தும் கவனித்து வாங்குங்கள்.
மேலே குறிப்பிட்ட 9 அம்சங்களை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ற பட்ஜெட்டிற்கேற்ற ஸ்மார்ட் வாட்சை தேர்ந்தெடுங்கள்.