
பாலிவுட்டில் முன்னனி நடிகர்களில் ஒருவராகவும், உடல் தகுதியும் வசீகரமும் கொண்ட நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். 59 வயதான நடிகர் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிலாக வலம் வருகிறார். ஆனால் சங்கீதா பிஜ்லானி, கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து 18-வது சீசன் வரை தொகுத்து வழங்கியிருக்கிறார். கடந்த 18-வது சீசனுக்கு சல்மான்கான் சுமார் ரூ. 250 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் பைஜான் என்று பிரபலமாக அழைக்கப்படும் அவருக்கு, தொழில்துறையிலோ அல்லது நாட்டிலோ மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
1988-ம் ஆண்டு திரைவுலகில் நுழைந்த சல்மான் கான் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1989-ல் சூரஜ் பர்ஜாத்தியாவின் ‘மைனே பியார் கியா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தன் மூலம் பிரலமடைந்தார்.
இந்த படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த ‘ஹம் ஆப்கே ஹைன் கௌன்’,‘ஹம் சாத்-சாத் ஹை’,‘ கரண் அர்ஜுன்’, ‘பீவி நம்பர் 1’, போன்ற படங்கள் பல வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன் பாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தபாங், ரெடி, பாடிகார்ட், தபாங் 2, டைகர் ஜிந்தா ஹை, பஜ்ரங்கி பைஜான், சுல்தான் போன்ற அதிக வசூல் செய்த அதிரடி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார்.
பல ஆண்டுகளாக சல்மான் கான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி் தான் இப்போது வரை கேட்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை திருமணம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வந்த சல்மான், அண்மையில் மும்பையில் நடந்த ‘தி கிரேட் இந்தியன்’ நிகழ்ச்சியின் ப்ரொமோஷனில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். திருமணம் என்பது வெறும் "பணத்தை வீணடிப்பது" என்று தான் நினைப்பதாகக் கூறிய அவர், இப்போதெல்லாம் கல்யாணம் என்பது மிகப் பெரிய விழாவாகி விட்டது என்றார்.
அதற்கு சாமானியர்களே லட்சக்கணக்கில் செலவழிக்கும் நிலையில், பிரபலமாக இருந்தால் கோடிகளில் செலவிட வேண்டியுள்ளது. மேலும் சல்மான்கான் தனக்கு இருந்த விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி தூங்கும்போது குறட்டை விட்டாலே விவாகரத்து வரை செல்கிறது. மேலும், விவாகரத்துக்கு பிறகு மனைவி பாதி சொத்தை எடுத்துக்கொள்வார் என்றார். அவர் நகைச்சுவையாக கூறினாலும், இக்கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.