
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சிக்கந்தர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். ராஷ்மிகாவிற்கு இந்தியில் இது 3-வது படமாகும். அனிமல் மற்றும் சாவா படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளன. இதனால் சிக்கந்தர் படமும் அதிக வசூலை குவிக்கும் என்று ரசிகர்கள் நம்புவதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சல்மான் கானுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். 1988-ல் தனது திரைவுலக பயணத்தை தொடங்கிய இவர் 90களில் இளம் ரசிகர்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார். 57 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்தாலும் இவருக்கு பெண்கள் மத்தியில் இன்னமும் ஒரு க்ரஷ் இருக்கத்தான் செய்கிறது.
இவர் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் எப்படியாவது ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதில் சல்மான் தீவிரமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்திருக்கிறார் நடிகர் சல்மான கான். ஏ.ஆர்.முருகதாஸ் சுமார் 17 வருடங்களுக்கு முன் கஜினி படத்தை இந்தியில் அமீர்கான், அசின் ஆகியோரை வைத்து இயக்கி இருந்தார். அதன் பிறகு இப்போது தான் சிக்கந்தர் படத்தின் மூலம் இந்தி படஉலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். முருகதாஸ் நீண்ட நாட்கள் கழித்து இந்தியில் சிக்கந்தர் படத்தை இயக்குவதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் சிக்கந்தர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் சல்மான் கான் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சல்மான் கானின் முந்தைய படங்களைப் போலவே, இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 31 வயது குறைவான ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், சல்மான் கான் இந்த வயது வித்தியாசம் குறித்த பரபரப்பான கேள்விக்கு தனது தனித்துவமான பாணியில் பதிலளித்தார்.
‘எனக்கும் கதாநாயகிக்கும் 31 வயது வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்கள். கதாநாயகிக்கு எந்த பிரச்சனையும் இல்லை அல்லது கதாநாயகியின் தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் பிரச்சனை?’ என்ற சல்மான் கானின் பஞ்ச் வசனம் பத்திரிகையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
சல்மான் கான் அதோடு நிற்கவில்லை. ‘ராஷ்மிகாவுக்கு திருமணமாகி அவருக்கு மகள் பிறந்தால், ராஷ்மிகாவின் சம்மதத்துடன் அவரது மகளுடனும் நடிப்பேன்’ என்று சல்மான் கான் கூறினார்.
மேலும், ‘புஷ்பா 2 படப்பிடிப்பை மாலை 7 மணிக்கு முடித்துவிட்டு, இரவு 9 மணிக்கு எங்களுடன் சேர்ந்து கொள்வார். காலை 6.30 மணி வரை வேலை செய்துவிட்டு, புஷ்பா 2 படப்பிடிப்பில் மீண்டும் ஈடுபடுவார். கால் முறிந்த பிறகும், எங்களுடன் படப்பிடிப்பைத் தொடர்ந்தார், ஒரு நாள் கூட படப்பிடிப்பை ரத்து செய்யவில்லை’ என்று சல்மான் கான் சக நடிகை ரஷ்மிகாவின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
சிக்கந்தர் படம் மார்ச் 31-ம் தேதி (திங்கள்) ஈத் பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாக உள்ளது. புதுப்படங்கள் எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் தான் வெளியிடப்படும். ஆனால் சிக்கந்தர் படம் திங்கள் (ஈத் பண்டிகை) கிழமை வெளியாக உள்ளது. சல்மான் கானின் படம் வெள்ளிக்கிழமை-வெளியீட்டு பாரம்பரியத்தை தவறவிட்டது இது முதல் முறை அல்ல. 2023-ம் ஆண்டில் சல்மான் கானின் டைகர் 3 தீபாவளியுடன் இணைந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகாவைத் தவிர, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியதுடன் யூடியூபில் வெளியான 17 மணி நேரத்தில் 3.8 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.