விமர்சனம்: 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' - கடத்தல் - காவல்துறை - காதல் - குடும்பம் - காமெடி!
'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' என்று தமிழ்த் திரையுலகில் ஒரு முழக்கம் உண்டு. அப்படியொரு வெற்றி கண்ட படம் தான் தமிழில் பொங்கலுக்கு வெளிவந்த மதகஜராஜா. இங்கு இது என்றால் ஆக்கட தேசத்தில் சங்கராந்திக்கு வஸ்துன்னாம் (வருகிறோம்) என்று சொல்லியடித்த வெற்றி படத்தின் பெயரும் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. ஷங்கர் ராம்சரன் கூட்டணியில் வெளிவந்த கேம் சேஞ்சர் மற்றும் பாலையாவின் டாக்கு மஹராஜ் என்ற இரண்டு படங்களையும் பின்தள்ளி ஒரு மாபெரும் வெற்றிபெற்று கோடிகளை அள்ளிக்கொண்டிருக்கிறது இது.
இத்தனைக்கும் மிகவும் பழக்கப்பட்ட அரைத்த மாவு தான் இந்தப் படமும். அரசின் அழைப்பை ஏற்று ஹைதராபாத்திற்கு பயணம் செய்யும் மிகப் பெரிய கம்பியூட்டர் நிறுவனத்தின் சி இ ஓ சத்யா, ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். அவரைத் தேடித் கண்டுபிடிக்க மீனாட்சி சவுத்திரி தலைமையில் தனிப்படை அமைக்கிறார் முதல்வர். இரண்டே நாட்களில் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் அந்தக் கூட்டத்தை அழிக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு. அதைச் செய்ய வெங்கடேஷ்தான் சரியான ஆள். ஆனால் இந்தக் காவல்துறையே வேண்டாம் என்று தலைமுழுகி விட்ட அவர், யார் அழைத்தாலும் திரும்ப வரமாட்டார் என்று தவிக்கிறது போலீஸ். பிரபல என்கவுண்டர் காவல்துறை அதிகாரியான வெங்கடேஷ் அதிலிருந்து விலகித் தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தைகள் எனக் கிராமத்தில் வசித்து வருகிறார். "நான் அழைத்தால் வருவார்; ஏனென்றால் அவர் என் முன்னாள் காதலர்" என்கிறார் மீனாட்சி. அவர் சென்றாரா. இவர் வந்தாரா. குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் என்ன என்பது தான் மீதிக் கதை.
தெலுங்குப்பட உலகில் 'ஹிட் மெஷின்' என்று அழைக்கப்படும் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் வெங்கடேஷும் இவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஒரு கடத்தல் திரில்லருக்குள் குடும்பத்தைப் புகுத்திக் காமெடி கலாட்டா நடத்தியிருக்கிறார் இயக்குனர். படத்தில் கொஞ்சம் தொய்வு வருகிறது என்று எண்ணும்போது, வெங்கடேஷின் மகனாக வரும் அந்த ரெட்டிப் பையன் (மாஸ்டர் ரேவந்த்) நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப் போட்டுக் கலகலக்க வைக்கிறான். அவன் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்கும் கிராமத்தார், 'முதலில் உங்கள் வீட்டில் நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி யில் டப்பிங் சீரிஸ்களை பார்க்க வைக்காதீர்கள்' என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு அவனின் அட்டகாசம் இருக்கிறது. மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ். ராமன் என்று நினைத்துக் கொண்டிருந்த கணவனின் இன்னொரு பக்கம் தெரிந்து பொங்கும் வேடத்தில் கச்சிதம். ஆனால் ஆடல் காட்சிகளில் தான் சற்று தடுமாறுகிறார். சற்று ஓவர் ஆக்டிங் செய்கிறாரோ என்று அப்பட்டமாகத் தோன்றும் அளவு இருக்கிறது அவர் நடிப்பு. லேசான கவர்ச்சிக்கு மீனாட்சி. முதல்வராக நரேஷ். அவரின் தலைவராக விடிவி கணேஷ். காவல்துறை அதிகாரிகளாகச் சாய்குமார், உபேந்திரா லிமாயே அவர்கள் பங்குக்குச் சிரிப்பை வரவழைக்கிறார்கள்.
பெரிதாகச் சண்டைக்காட்சிகள் வைப்பதற்கு காரணங்கள் இருந்தாலும் நகைச்சுவையாகவே படம் முழுதும் நகர்த்திக் கொண்டதில் இருக்கிறது இயக்குனரின் சாமர்த்தியம். வில்லன்களும் காமெடியன்களாகவே அமைந்துள்ளது தான் பலமும் பலவீனமும். மீனாட்சிக்கும் வெங்கடேஷுக்கும் உண்டான வயது வித்தியாசத்தை அவரை விட்டே கிண்டல் செய்து விமர்சனத்திலிருந்து தப்பித்து விட்டார். ஆனால் இவர்கள் இருவரது போலீஸ் தொடர்பான பிளாஷ்பாக் காட்சிகளுக்குக் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். பீம்ஸின் இசையில் இரண்டு பாடல்கள் பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ அந்த அளவு இருக்கிறது.
கதை கத்தரிக்காய் எல்லாம் தேவையில்லை. குடும்பத்தோடு சென்றோமா, மனது விட்டுச் சிரித்தோமா, நெளியாமல் படம் பார்த்தோமா என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் முழு நிறைவைத் தரும் என்பதில் ஐயமில்லை. பிளாக் பஸ்டர் பொங்கலு என்று படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் வெங்கடேஷ். அது உண்மை என்று நிரூபித்திருக்கிறது இந்தப்படம்.