தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா, இசிஆர்-ல் உள்ள தங்கள் பிரமாண்டமான வீட்டை விட்டு வெளியேறி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த முடிவுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணத்தை சரத்குமார் ஒரு பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற '3 பிஎச்கே' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சரத்குமார் தற்போது அளித்த பேட்டியில், "நாங்கள் வாழ்ந்த அந்த வீடு சுமார் 14,000 முதல் 15,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. அந்த வீட்டைப் பராமரிக்க மட்டும் குறைந்தது 15 வேலைக்காரர்கள் தேவைப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, வீட்டின் 7 கதவுகளையும் மூடுவது, திறப்பது என பல வேலைகள் இருந்தன. நான் படப்பிடிப்பு காரணமாக அடிக்கடி வெளியே சென்று விடுவேன். ஆனால், ராதிகா தனியாக அந்த பெரிய வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எங்கள் மகன் ராகுல் வெளிநாட்டில் படித்து வருகிறான். மகள்கள் திருமணத்திற்குப் பிறகு அவரவர் வீட்டில் வசிக்கின்றனர். இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் கடினமாக இருந்தது," என்று உருக்கமாகக் கூறினார்.
இந்த தனிமையுணர்வு காரணமாகவே இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். தற்போது, அந்த பிரம்மாண்டமான வீட்டை ஒரு ஐடி கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும், எளிமையான வாழ்க்கையைத் தேடி ஆழ்வார்பேட்டையில் ஒரு வாடகை வீட்டிற்கு வந்திருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சரத்குமாரின் இந்த வெளிப்படையான பேச்சு, திரையுலக நட்சத்திரங்களின் வாழ்க்கையிலும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இருப்பதை உணர்த்துகிறது. மேலும், சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பேசப்படும் '3 பிஎச்கே' திரைப்படத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூட பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.