எதற்கெடுத்தாலும் கோபப்படும் தனது மகனைக் கட்டுப்படுத்த தாய் ஒரு சத்தியம் வாங்கிக் கொள்கிறார். யார்மேல், எந்தக் கோபம் வந்தாலும் பொறுத்துக் கொள் . எழுதி வை. ஒருவாரம் அந்தக் கோபம் தாங்கி, அந்த கோபம் நியாயமானது என்று நினைத்தால் ஒரே ஒரு நாளில் அதைத் தீர்த்துக்கொள். அந்த நாள் உன்னுடையது என்று சத்தியம் வாங்கி கொள்கிறார். அதைத் தொடர்ந்து ஆறு நாள்கள் மாணிக்கமாகவும் ஒரு நாள் பாட்ஷாவும் வாழும் சூர்யா என்பவரைப் பற்றிய கதை தான் சரிபோதா சனிவாரம். தமிழில் சூர்யாவின் சாட்டர்டே.
சற்றே வித்தியாசமான இந்த முடிச்சை ஒரு பக்கா கமர்சியல் சினிமாவாக மாற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் விவேக் ஆத்ரேயா. சூர்யாவாக நானி. படத்தின் வில்லன் என்று சொல்ல முடியாது. இன்னொரு கதாநாயகன் போலவே வருகிறார் எஸ் ஜே சூர்யா. வில்லன் கதாபாத்திரம் பலமாக அமைந்து விட்டால் படம் பாதி தப்பித்து விடும். அதுவும் எஸ் ஜே சூர்யா போல ஆள் அமைந்து விட்டால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை. இவர்கள் இருவருக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் செகண்ட் ஹாஃப். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இப்படத்தை தாங்கிப் பிடிப்பது இவர்கள் இருவரும் தான். சண்டைக்காட்சிகளை அதகளப் படுத்தி இருக்கிறார்கள். காமிரா ஆங்கிள்களும், எடிட்டிங்கும் கூடுதல் பலம்.
நாயகனின் அத்தை மகளாகப் பிரியங்கா மோகன். சற்று முக்கியத்துவம் இருக்கக்கூடிய பாத்திரமாக இருந்தாலும் உணர்ச்சிகள் வராமல் சிரமப் படுகிறார். கடைசி காட்சியில், தலையில் அடிபட்டு மயங்கினாலும் கண் திறந்தபிறகும் படுத்துக் கொண்டே நாயகனைப் பார்க்கும் காட்சியில் பரிதாபத்திற்கு பதில் சிரிப்பு வருகிறது நமக்கு.
அப்பாவாக சாய்குமார், அம்மாவாக அபிராமி, அக்காவாக அதிதி பாலன், எஸ் எஸ் ஜே சூர்யாவின் அண்ணனாக முரளிஷர்மா, சுபலேக சுதாகர், பிஜாய் கோஷ், எனப் பலரும் வருகிறார்கள்.
லாஜிக்கிற்கும் படத்திற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரான சூர்யா ஒரு குறிப்பிட்ட ஏரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாம். கோபம் வந்தால் அங்கு யாரையாவது கூட்டி வந்து சாவடி அடிப்பாராம். ஊரும் வாய் பொத்திப் பார்க்குமாம். காதில் பூக்காடு. எந்தக் காலத்தில் இப்படி நடக்கும்?
ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரம் கடிகாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பத்து நிமிடம் தாமதமாக மாற்றி வைத்து விடும். அது பின்னால் ஒரு கட்டத்தில் காட்சியைச் சுவாரசியமாக மாற்றியது என்னவோ உண்மை. ஆனால் அந்தப் பாத்திரம் இருக்கும் இடங்களில் எல்லாம் இப்படி மாற்றி வைத்திருக்கும் என்று எப்படி நம்பினார் நாயகன். இயக்குநருக்கே வெளிச்சம்.
முரளியின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்திற்கு பலம். ஊகிக்க முடிந்த திரைக்கதையாக இருந்தாலும் நானி, மற்றும் சூர்யாவின் நடிப்பால் ஒரு ஜாலியான வீக்கெண்ட் என்டர்டைனராக வந்திருக்கிறது சரிபோதா சனிவாரம்.