இன்று வெளியாகும் சசிகுமாரின் ‘ஃபிரீடம்’ - ‘டூரிஸ்ட் பேமிலி’-ஐ மிஞ்சுமா?

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பின் வெளியாகும் சசிகுமார் படமென்பதால் ஃபிரீடம் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
freedom movie
freedom movie
Published on

பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சசிகுமார் 2008-ம் ஆண்டு ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வசூலை குவித்தது. அதன் பின் இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் முன்னேறிய சசிகுமார் தற்போது நாயகனாக பிஸியாக நடித்து வருகிறார். சசிகுமார் கைவசம் பல படங்கள் விரைவில் வெளிவர காத்திருக்கின்றன.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றத் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சசிகுமார் இலங்கை தமிழராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபிரீடம்’. விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் நாயகனாகவும், லிஜோமோல் ஜோஸ் நாயகியாகவும் நடிக்க இவர்களுடன் மாலவிகா அவினாஷ், சரவணன், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்த படம் குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழகத்திலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைப் பேசும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. டூரீஸ்ட் ஃபேமிலியைத் தொடர்ந்து, மீண்டும் இப்படத்திலும் இலங்கைத் தமிழராக வருகிறார் சசிகுமார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பின் வெளியாகும் சசிகுமார் படமென்பதால் ஃபிரீடம் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஃபிரீடம் திரைப்படம் இன்று (ஜூலை 10-ம்தேதி) தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
ஓடிடியில் வருகிறது டூரிஸ்ட் ஃபேமிலி! எப்போது தெரியுமா?
freedom movie

அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி வரிசையில் சசிகுமாருக்கு பெருமை சேர்க்கும் படமாக ஃபிரீடம் திரைப்படம் அமையுமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யுமா அல்லது காலை வாருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com