
நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக கோவையில் நேற்று மாலை காலமானார்.
நடிகர் சத்யராஜ் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனது வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் சினிமாவில் சேர்ந்து நடித்தனர். மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஒன்றாக 1987ல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக 12 வெற்றி படங்களில் சேர்ந்து நடித்தனர்.
1978ம் ஆண்டு தொடங்கிய அவரது கலை பயணம் இன்று வரை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் காலமானார். அவருக்கு வயது 94. கோவையில் வசித்து வந்த இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் வயது மூப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.
நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார். தாயின் இறப்பு செய்தியறிந்த அவர் உடனடியாக கோவைக்கு விரைந்துள்ளார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை அறிந்த அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சத்யராஜின் தாய்க்கு இரங்கல் பதிவையும், சத்யராஜுக்கு ஆறுதலும் தெரிவிக்கின்றனர்.