

தமிழ் சினிமா ஹீரோக்களில் சினிமாவிலும், மேடையிலும் லொள்ளு, காமெடி என இரண்டையும் மிக யதார்த்தமாக செய்பவர் சத்யராஜ். சத்யராஜ் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர் தனக்கு பரிசாக அளித்த கர்லாகட்டையை வைத்து தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். எம்.ஜி.ஆரை ரசிகர்கள் பலர் வாத்தியார் என்று அழைப்பார்கள். சத்யராஜும் எம்.ஜி.ஆரை வாத்தியார் என்று தான் சொல்வார்.
தற்போது டைரக்டர் நலன் குமாரசாமி 'வா வாத்தியார்' என்ற படம் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோ கார்த்திக் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். மேடை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை போன்று வேஷம் போடுபவர்கள் பலர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்கள். எம்.ஜி.ஆர் பட பாடல்களை ரீமிக்ஸ் செய்து இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் பயன்படுத்தி உள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ் அவர்களும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். ஆனால் சத்யராஜ் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க வில்லை. இப்படத்தில் ஹீரோ கார்த்திக்கிற்கு அடுத்த படியாக ஆனந்தராஜ் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார்.
நாம் ஹீரோ வாக நடித்த காலத்தில் வாத்தியார் என்ற தலைப்பில் நடிக்க முடியவில் என்ற வருத்தம் சத்தியராஜிற்கு இருந்திருக்கிறது. இருந்தாலும் தனது உறவுக்கார பையன் கார்த்திக் என்பதால் சரி போனால் போகட்டும் என்று தனக்கு தானே ஆறுதல் படுத்தி கொண்டு விட்டார் சத்யராஜ்.
இருந்தாலும் ஒன்று மட்டும் சத்யராஜ் மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது. தான் ஹீரோவாக நடித்த காலங்களில் தனது படங்களில் வில்லனாக நடித்து திரையில் அடி வாங்கிய ஆனந்தராஜ் வா வாத்தியார் படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார். தனக்கு டைரக்டர் இந்த வாய்ப்பு வழங்க வில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்திருக்கிறது. இந்த வருத்தத்தை தனக்கே உரிய லொள்ளு பாணியில் வா வாத்தியார் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் மேடையில் வெளிப்படுத்தினர்.
மேடையில் ஏறி மைக்கை பிடித்த சத்யராஜ் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தின் வசனத்தை சொல்லி "இது எந்த படத்தின் வசனம் தெரியுமா" என முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆனந்தராஜிடம் கேட்க ஆனந்தராஜ் நாடோடி மன்னன் என்று பதில் சொன்னார். "தப்பு" இது மர்ம யோகி என்று ரிப்ளை செய்தார். இப்படி பல எம்.ஜி.ஆர் பட வசனங்களை பேசி காட்டி ஆனந்தராஜிடம் இது எந்த பட வசனம் என்று கேட்க, ஆனந்தராஜ் அனைத்து படங்களின் பெயர்களையும் தவறாகவே சொன்னார். வேகமாக ஓடி சென்று நடிகர் சிவகுமாரிடம் பதில் கேட்க, சிவகுமார் காப்பி அடிக்காதே என்று சொல்லி விட்டார்.
ஒரு கட்டத்தில் ஆனந்தராஜ், சத்தியராஜை பார்த்து "அண்ணே நீங்க கிரேட், நீங்க உண்மயான வாத்தியார் ரசிகர்தான்" என்று சரண் அடைந்து விட்டார். "அப்படி வா வழிக்கு, பாருங்க டைரக்டர் சார் வாத்தியார் ரசிகன் நான் வாத்தியாரின் ரசிகனாக நடிக்கல, வாத்தியார் பட வசனங்களுக்கு தப்பு தப்பா பதில் சொல்ற ஆனந்தராஜ் வாத்தியார் ரசிகனா நடிக்கிறாரு, இருந்தாலும் பரவாயில்லை, வாத்தியார் ரசிகனாக நடிக்கறதால் பொழைச்சு போ" என ஆனந்தராஜை பார்த்து தனக்கே உரிய பாணியில் சொன்னார் சத்தியராஜ்.
சாத்தியராஜின் லொள்ளு கலந்த இந்த மேடை நகைசுவை பலரால் ரசிக்கப்பட்டது. மேலும் 'பாட்சாவையே கம்பத்தில் கட்டி வைத்து அடித்த டெரர் வில்லன்' ஆனந்தராஜை இப்படி காமெடி பீஸ் ஆகியது பலர்க்கு சிரிப்பை வர வைத்தது.
வா வாத்தியார் படத்தில் இரண்டு முக்கியமான சிறப்பு விஷங்கள் உள்ளன. எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இந்த மாதம் இருபத்திநான்காம் தேதி வருகிறது. இதற்கு சில தினங்கள் முன்பாக வரும் டிசம்பர் பன்னிரெண்டாம் தேதி வா வாத்தியார் திரைக்கு வருகிறது. எம்.ஜி.ஆரை பற்றி ஊடகங்கள் பேசும் இந்த மாதத்தில் இந்த படம் வருவது கூடுதல் சிறப்பு.
மேலும் வரும் டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள். அன்று படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. இன்றைய சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரை நினைவு படுத்தும் வா வாத்தியார் படமும் வெளியாவது ரசிகர்களுக்கு இயல்பாக அமைந்த இன்ப பரிசாகும். ரஜினியின் படையப்பாவும், கார்த்திக்கின் வா வாத்தியரையும் ரசிகர்கள் வரவேற்க தயாராகி வருகிறாரார்கள்.