எம்.எஸ்.வி - கவிஞர் வாலி - எஸ்.பி.பி - கூட்டணியில்... 'முத்தான முத்தல்லவோ' படப் பாடலின் ரகசியம்!
படம்: முத்தான முத்தல்லவோ(1976)
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: வாலி
குரல்: எஸ்.பி.பி, எம்.எஸ்.வி
மெல்லிசை மன்னரின் கனத்த சிரிப்போடு பாடல் தொடங்க, முன்னிசை அவர் சிரிப்பின் ஸ்வரத்தை பிரதி எடுக்கும். முதலில் மெல்லிசை மன்னர் பல்லவியைப் பாட, தொடர்ந்து எஸ்.பி.பி.
“எனக்கொரு காதலி இருக்கின்றாள் – அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை,
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை, தமிழோசை….”
விளக்கம் – எம்.எஸ்.வி. அவர்கள் தமக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவள் ச, ரி, க, ம, ப, த, நி – என்ற ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் எனவும் இசைக் காதலியை வர்ணிக்கும் வகையில் இந்த வரிகள் உள்ளன.
மேலும் கீதம் என்பது பெண்ணின் கையில் அணிந்துள்ள வளையல் ஏற்படுத்தும் வளையோசை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டுமல்லாது, கீதத்தைத் தொடர்ந்து எழும் நாதத்தை எவ்வாறு வர்ணிக்கிறாரென்றால், அது வளையல் அணிந்த பெண் மீட்டிடும் தமிழோசை என்று கூறி தமிழைப் போற்றி பாராட்டுகின்ற வரிகளாகவே அமையப்பெற்றுள்ளன. அப்படி வரிகளை அமைத்துள்ளார் கவிஞர் வாலி அவர்கள்.
எஸ்.பி.பி அந்த 'ஓசை' என்ற வார்த்தையை நீட்டும் அழகு… அது ஒரு தெய்வீக தமிழ் ஓசை…
தன்னுடைய நாத உபாஷனைக்கு மெல்லிசை மன்னர் பயன்படுத்தியது ராகமாளிகை என்று கேள்வி. பாடல் முழுதும் பியானோ-வயலின் சங்கமத்தில் பூமாலை தொடுத்து இசை மகளுக்கு சார்த்தி இருப்பார்.
வாலி அவர்கள் எம்.எஸ்.வியை தமது மனதில் கொண்டு எழுதப்பட்ட வரிகளாக
"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் எந்நாளும்"
ஒரு உடலுக்கு ஒரு உயிர்தான் இருக்க முடியும். ஆனால் இசையோடு பின்னி பிணைந்த ஒருவருக்கு அந்த இசை அவரோடு வாழுகின்ற ஒரு ஜீவனாகவே உருவகப்படுத்தியது மிக சிறப்பானதாக உள்ளது. அடுத்து வரும் வரிகளில்..
"பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக”
அந்த இசை என்கின்ற தமிழ்ப் பெண்கள் கண்களால் பேசுவது எப்படி இருக்கிறது என்றால் ஸ்வர வரிசையில் ஐந்தாவதாக உள்ளது 'ப' என்ற சர வரிசையாகும். அது இசையுலகில் பஞ்சமம் என குறிப்பிடப்படுகிறது. மேலும் இலக்கியத்தில் நில வகைகளைக் குறிப்பிடும் பொழுது குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகியவற்றையும் குறிப்பிடப்படுகிறது.
அது தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டையும் குறிக்கும் வகையில் வாலி வகைப்படுத்தி எழுதி இருப்பது தமிழன்னைக்கு அவர் சூட்டிய பா-மாலை ஆகும். அந்த பஞ்சமம் எம்.எஸ்.வி பஞ்சணை விரித்து அவரை அழகாக துயில செய்கிறதாம். அதற்கடுத்த வரிகளில்..
"மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போல அவள் வந்தாள்"
காதலி வரும் வாகனம் மோகனம் என்னும் ராக பல்லக்கில் பவனி வந்து ஒரு தேவதைப் போல காட்சி அளித்து தம்மை ஆட்கொள்கிறாள் என்ற வகையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. மோகனம் என்பது ஆகர்ஷண சக்தி கூறலாம். இந்த ராகம் எப்போது வேண்டுமானாலும் இசைத்து பாடக் கூடிய ராகமாக அமைந்துள்ளது.
இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களுக்கும் இசைக்கும் உள்ள ஆத்மார்த்த காதலை வெளிப்படுத்துகிறது. எப்படி ஆண்டாள் கிருஷ்ணனை தனது மனதில் வரித்து கொண்டாளோ அப்படி இசையை தமது காதலியாக மெல்லிசை மன்னர் வரித்து கொண்டதை கவிஞர் வாலி மிக அழகாக பாடல் வரிகளால் சுட்டிக் காட்டி இதயத்தைத் தொட்டு விடுகிறார். பின் வரும் வரிகளில்..
"தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை
அணைக்கும் இனிதாக இனிதாக"
தெய்வதம் என்பது என்னவென்றால் உயரிய தெய்வீகத் தன்மை வாய்ந்தது என பொருள் கொள்ளலாம். உதாரணமாக கலைமகளின் கரங்களில் இருக்கும் வீணை மிகவும் தெய்வீக ஆற்றல் கொண்டதாகும். அந்த வீணையை மீட்டும் பொழுது, தெய்வீக சக்தி அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது இசை அறிந்தோர் அனைவரும் உணர்ந்ததுண்டு. அப்படி தெய்வதத்தை திருமகளாக உருவகப்படுத்தி இசையை ஆள்கின்றவரை அணைத்து இனிமை ஊட்டுவதாக உள்ளது என்று பாடல் வரிகளில் எஸ்.பி.பி குரலின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளது மிக சிறப்பானதாகும். அடுத்து..
"எந்நாளும் வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்…"
அந்த இசையரசியை காதல் செய்ததால் இந்த வையகம் எல்லாம் அவர் புகழைப் பாடவும், எதிர்காலம் எல்லாம் கைவசப்படக் கூடிய ஆற்றல் ஏற்பட்டுள்ளது என்று அழகாக பாடப்பட்டுள்ளது.
"முத்தாய்ப்பாக
தேன்சுவைக் கிண்ணம்
ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்"
என்ற வரிகளில் காதலி தேன்சுவை உள்ள அமுதை சுமந்து கொண்டு வந்து இசையரசரை அருந்த செய்து, அவர் சிறப்பான பாடல்களை தருவதற்கு பேருதவி செய்தாள் என்று தமிழன்னையைப் போற்றி உள்ளார்.
இந்த பாடல் இசையை மட்டுமல்லாது தமிழையும் சிறப்பு செய்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கவிஞர் வாலி ஆகியோரது உள்ளக்கிடக்கையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வாழ்த்துகள் அந்த ஆத்மாகளுக்கு!

