

இன்று ரீரிலீஸ் ஆகியுள்ள மங்காத்தா திரைப்படத்தை, அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தாவில் அவர் வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் அவருடன் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், மகத், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து இருந்தன.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு பிரத்தியேகமாக தீம் மியூசிக்கை யுவன் அமைத்திருந்தனர். அந்த பின்னணி இசை அஜித்திற்கு ஐகான் இசையாக மாறியிருந்தது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா அப்போது பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் இத்திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு சாதனை செய்து வருகிறது. முன்பதிவில் மட்டுமே 1.5 கோடி ரூபாய் வசூலித்து விஜய்யின் கில்லி சாதனையை முறியடித்தது.
மங்காத்தா திரைப்படத்தை நேரில் பார்க்க , அந்த திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தில் நடித்த பிரேம்ஜி அமரன், வைபவ், மகத், அஸ்வின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் , அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் திரையரங்கிற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் ரசிகர்களுடன் இணைந்து படத்தினை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இந்நிலையில் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்தக் கதையில் அஜித் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் தானாம். இதைக் கேள்விப்பட்ட அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் , ஜீவா ,பிரசன்னா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாகவும் தெரிவித்தார். அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நாகார்ஜூனாவை தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். கால்ஷீட் பிரச்சனைகளால் நாகார்ஜூனா படத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.
ஒருநாள் அஜித்தை யதார்த்தமாக வெங்கட் பிரபு சந்தித்த போது , அஜீத் நாம் சேர்ந்து எதுவும் படம் பண்ணலாமா? என்று கேட்டுள்ளார். அப்போது வெங்கட் பிரபுவும் மங்காத்தா படத்தின் கதையை சொல்ல அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டது. நீண்ட காலமாக தனக்கு ஹீரோவாக நடித்து போரடித்து விட்டதாகவும் , வில்லத்தனம் மிக்க விநாயக் மகாதேவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அஜீத் விருப்பம் தெரிவித்து இருந்தார். படத்தில் அஜீத் வந்ததும் நடிகர்கள் தேர்வில் பல மாற்றங்கள் வந்துள்ளது. வைபவ் , மகத் போன்றோர் பழைய நடிகர்களுக்கு மாற்றாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன் பிறகு நாகார்ஜூனாவிற்கு சொல்லப்பட்ட பாத்திரத்தில் அர்ஜூனை நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகினார்கள். ஆரம்பத்தில் இந்த கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று அர்ஜூன் தவிர்க்க நினைத்தார். அதன் பின்னர் படத்தில் நடித்ததும் , திரையில் தன் கேரக்டரைப் பார்த்து வெங்கட் பிரபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மங்காத்தா திரைப்பட மறு வெளியீட்டிற்கு முன்னதாக , படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெங்கட்பிரபு தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆயினும் ஸ்டைலிஷான அஜீத் கேரக்டரில் , நக்கல் நாயகன் சத்தியராஜ் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.